2023 உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் வேண்டும் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கும், இரண்டாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ வெளிப்படையாக மாற்றம் இருக்கும் என்று என்னால் கூற முடியாது, ஆனால் அடுத்தடுத்து போட்டிகள் என்றால் பொருத்தமானவை அல்ல. இதை பிசிசிஐ கவனத்தில் எடுத்துகொண்டால் நல்லது. நாங்கள் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இரண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு இடையே ஒரு நாளையாவது யாராக இருந்தாலும் எதிர்பார்ப்பார்கள்.
இது சாத்தியமா இல்லையா என்பது குறித்து பாதுகாப்பு நிறுவனங்களுடன் நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதனுடன் பிசிசிஐ-க்கும் தகவல் அளித்து வருகிறோம். நாங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பது பிசிசிஐக்கு முழுமையாகத் தெரியும்” என்றார்.
இந்தநிலையில், 2023 உலகக் கோப்பை அட்டவணையில் மீண்டும் மாற்றம் இருக்கிறதா என்பது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது, ” உலகக் கோப்பைக்கான ஹைதராபாத் மைதானம் தொடர்பான விஷயங்களில் நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன். ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை சரிசெய்ய முயற்சிப்போம்.
உலகக் கோப்பை அட்டவணையை மாற்றுவது எளிதானது அல்ல. இந்த அட்டவணை மாற்றத்தில் பிசிசிஐ மட்டும் முடிவு எடுக்காது. அதற்கு, ஐசிசிதான் முழு பொறுப்பு. போட்டியின் தன்மை மற்றும் எத்தனை பேர் வருவார்கள் என்பதை மதிப்பீடு செய்து காவல்துறை செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகளின் அட்டவணையில் மாற்றம்
முன்னதாக அட்டவணையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 15 ஆ தேதி அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. ஆனால் நவராத்திரியின் முதல் நாள் அக்டோபர் 15 என்று நரேந்திர மோடி ஸ்டேடியம் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், போட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதற்காக, ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
மறுபுறம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 12 ஆம் தேதி பாகிஸ்தான் மற்று இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது. ஆனால் மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நாளில் காளி பூஜையும் நடைபெற உள்ளதாக ஸ்டேடியம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்த போட்டியின் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக் எழுந்தது. இந்த போட்டியை ஒரு நாள் முன்னதாக அதாவது நவம்பர் 11 ஆம் தேதி நடத்த பிசிசிஐ முடி செய்தது.
இந்த இரண்டு போட்டிகள் தவிர மேலும் 7 போட்டிகளின் அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், அக்டோபர் 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டியும் அடங்கும். ஆனால் அதன் தேதி அக்டோபர் 10 ஆக மாற்றப்பட்டது ஆனால் தற்போது இந்த போட்டியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த 9 போட்டிகளின் அட்டவணையில் ஏற்பட்ட மாற்றங்கள்
- இங்கிலாந்து Vs வங்கதேசம்: 10 அக்டோபர் - காலை 10.30 மணி
- பாகிஸ்தான் Vs இலங்கை: 10 அக்டோபர் - 2.00 மணி ஆஸ்திரேலியா Vs தென்னாப்பிரிக்கா: 12 அக்டோபர் - 2.00 மணி
- நியூசிலாந்து Vs வங்கதேசம்: அக்டோபர் 13 - மதியம் 2.00
- இந்தியா Vs பாகிஸ்தான்: 14 அக்டோபர் - 2.00 மணி
- இங்கிலாந்து Vs ஆப்கானிஸ்தான்: 15 அக்டோபர் - 2.00 மணி
- ஆஸ்திரேலியா Vs பங்களாதேஷ்: 11 நவம்பர் - 10.30 மணி
- இங்கிலாந்து Vs பாகிஸ்தான்: 11 நவம்பர் - 2.00 மணி
- இந்தியா Vs நெதர்லாந்து: 12 நவம்பர் - 2.00 மணி