Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் உலகக்கோப்பை நாயகனுமான கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். இவரது ஒப்பந்த காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைமைப் பயிற்சியாளருக்கு விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் அதாவது, மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கவுதம் கம்பீர் அலோசனையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத் தக்கது. 


உலகக்கோப்பை நாயகன் கம்பீர்


கவுதம் கம்பீர் என்றாலே இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத வீரர். இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியபோது தொடக்க வீரராக களமிறங்கி 54 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 75 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல் 2011ஆம் ஆண்டு இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது நெருக்கடியான சூழலில் களமிறங்கி 122 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரி விளாசி 97 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து சதத்தினை தவறவிட்டிருந்தார். இதனாலே இவரை உலகக்கோப்பை நாயகன் எனக் குறிப்பிடலாம். 


ஐபிஎல் தொடரின் மன்னாதி மன்னன் 


கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு 2012ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டு கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின்னர் மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் செயல்பட்டு கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமானார்.