நான் இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருக்கிறேன் என  ரசிகர் ஒருவர் கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பதிலளித்துள்ளார். 


சச்சினுக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆக திகழ்ந்தவர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். பதற்றமான சூழலில் செம கூலாக விளையாடுவது, ஜெயிக்க முடியாத போட்டியில் அணியை ஜெயிக்க வைப்பது என அவரின் முடிவுகளுக்கும் கூட இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சொல்லப்போனால் தோனி “கேப்டன் கூல்” என்றே அழைக்கப்படுகிறார். 


இப்படியான தோனி கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். டி20 போட்டிகளில் இருந்தும் 2019 ஆம் ஆண்டு விலகினார். தற்போது தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 15 ஆண்டுகளாக வலம் வருகிறார். 


கிரிக்கெட் தவிர தோனி பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியைப் பெற்றுள்ள நிலையில், ராணுவ வீரர்களுடன் பயிற்சி, விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடும் வீடியோக்களும், புகைப்படங்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அடுத்ததாக தோனி எப்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்ற கேள்வி தான் அனைவரிடத்திலும் எழுந்தது. 42 வயதான தோனி கடந்தாண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெற்று விடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். 


வயதாகி விட்ட நிலையில் 2024 ஐபிஎல் சீசனுடன் அவர் கண்டிப்பாக ஓய்வு பெறுவார் என சொல்லப்படுகிறது. இதனிடையே ரசிகர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் தோனி பங்கேற்றார். அப்போது அவரிடம், நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் ஓய்வுக்குப் பின் என்ன செய்யப் போகிறேன் என இதுவரை யோசிக்கவில்லை.


காரணம் நான் இன்னும் கிரிக்கெட் தான் விளையாடி கொண்டிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் நான் இன்னும் இருக்கிறேன். கிரிக்கெட்டுக்கு பிறகு என்ன செய்யப்போகிறேன் என்பதை பற்றி யோசிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இந்திய ராணுவத்துடன் இணைந்து கூடுதல் நேரத்தை செலவிடுவேன் என்பதை நிச்சயமாக சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.