கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு பி.சி.சி.ஐ.யின் முதல் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த வியாழனன்று நடைபெற்றது. பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவ்ரவ் கங்குலி, துணைச் செயலாளர் ஜெய்ஷா, நிர்வாகிகள் அருண்துமால், ஜெயேஷ் ஜார்ஜ் மற்றும் பிற நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூடட்டத்தில் பி.சி.சி.ஐ.யின் வரவு – செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பி.சி.சி.ஐ. கிரிக்கெட் தவிர இதர நிகழ்வுகளுக்காக ரூபாய் 22 கோடி செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக மட்டும் ரூபாய் 18 கோடி செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத்தொகைக்காக ரூபாய் 4 கோடியும், பி.எம்.கேர்ஸ் மூலமாக தடகள வீரர்களுக்கு வழங்குவதற்காக நினைவுப்பரிசுகள் மட்டும் ரூபாய் 5 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
கடந்தாண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைளை ஊக்குவிப்பதற்காக இந்த செலவுகளை முன்னெடுத்துள்ளதாக பி.சி.சி.ஐ. கூறியுள்ளது. மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை விளம்பரப்படுத்துவதற்கு மட்டும் ரூபாய் 7 கோடி வரை செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, ஒலிம்பிக் விழிப்புணர்வுக்கான டீ சர்ட்கள் மட்டம் ரூபாய் 98 லட்சத்திற்கும், ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக தன்னம்பிக்கை பாடலை இசையமைத்த மோஹித் சவுகானுக்கு ரூபாய் 70 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. கூறியுள்ளது. மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்கு ரூபாய் 68 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவிப்பது பி.சி.சி.ஐ.யின் கடமை என்றும். இந்த செலவுகளை அனைத்து பி.சி.சி.ஐ. நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர் என்றும் பி.சி.சி.ஐ.யின் உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவிலே கோடிக்கணக்கில் பணம் கொட்டும் விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே உள்ளது. ஐ.பி.எல். வருகைக்கு பிறகு பி.சி.சி.ஐ.யின் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Lara Meet Team India : இந்திய வீரர்களுக்கு "சர்ப்ரைஸ்" தந்த லாரா..! அன்பை பொழிந்த தவான்..! வைரலாகும் வீடியோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்