இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இந்த நிலையில், டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா இந்திய வீரர்களின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு செல்லும் வழியில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த வீடியோவை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.




ப்ரையன் லாராவுடன் இந்திய கேப்டன் ஷிகர்தவான், சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இந்திய வீரர்களுடன் சிரித்து பேசிய ப்ரையன் லாரா அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர், பிரையன் லாராவுக்கு இந்திய வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.






வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகிய ஜாம்பவான் வீரர் ப்ரையன் லாரா உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக ஒப்பிடப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மட்டுமே. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 400 ரன்களை விளாசிய மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர். இந்திய வீரர்களை சந்தித்த பிறகு தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரும், லாராவின் சமகால கிரிக்கெட் வீரரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமாகிய ராகுல் டிராவிட்டை நேரில் சந்தித்து பேசினார். 




பல முறை தனி ஆளாக போராடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற வைத்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 53 வயதான ப்ரையன் லாரா 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 34 சதங்கள், 48 அரைசதங்களுடன் 11 ஆயிரத்து 953 ரன்களை விளாசியுள்ளார். 299 ஒருநாள் போட்டிகளில் ஆடி 19 சதங்கள், 63 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 405 ரன்களை குவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண