இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக்கொண்டுள்ளார். அண்மையில் இந்திய அணி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து சேத்தன் சர்மா பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சர்ச்சையான வீடியோ:
அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு சேத்தன் சர்மா அளித்த பேட்டியில் இந்திய அணி குறித்து அவர் தெரிவித்து இருந்த தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கங்குலி - கோலி இடையேயான விவகாரம், பும்ராவின் உடற்தகுதி குறித்து பேசியது பேசுபொருளானது. அதோடு, ”ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் என் வீட்டிற்கு வந்து வெகு நேரம் பேசிவிட்டு செல்வார்கள். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசும். ஆனால், அவை என் வீட்டை விட்டு வெளியே வராது” என்றும் சேத்தம் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்த பி.சி.சி.ஐ, சேத்தன் ஷர்மா அளவுக்கு அதிகமாக பேசி வருவதாகவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான், அவர் தனது தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?.. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
சேத்தன்சர்மா:
1966ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள லூதியானாவில் பிறந்த சேத்தன் சர்மா, வலது கை வேகப்பந்துவீச்சாளராக தன்னுடைய 17வது வயதிலே இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு பெற்றார். தொடர்ந்து19வது வயதிலே இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே மோஷின்கானை அவுட்டாக்கினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் ஓவரிலே விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இந்திய அணிக்காக முதல் உலகக்கோப்பையை வென்ற கபில்தேவுடன் இணைந்து 5 ஆண்டுகள் வேகப்பந்துவீச்சில் கூட்டணி அமைத்து வீசியுள்ளார். 1985ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின்போது 3 டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியபோது இவரை அனைவரும் திரும்பிபார்த்தனர். பின்னர், அடுத்தாண்டே இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகளை எடுத்தார்.
பேட்டிங், பவுலிங்:
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அசத்தி வந்த சேத்தன்சர்மா 1989ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய சேத்தன்சர்மா 1994ம் ஆண்டு வரை விளையாடினார். 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மாவின் உறவினர்தான் சேத்தன் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்குழு தலைவர்:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக மிகவும் புகழ்பெற்றார். கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிய சேத்தன் சர்மா 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன்சமாஜ் சார்பில் களமிறங்கினார். அந்த தேர்தலில் 18.2 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம்பிடித்தார். பின்னர் பாஜகவில் இணைந்து விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்புகள் பெற்றார். தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது பேச்சு சர்சையான நிலையில், அப்பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளார்.