இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அதிர்ச்சிகரமாக ஜாக் கிராவ்லி 4 ரன்களில் வெளியேற, பென் டக்கெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.
தொடர்ந்து, போப் 42 ரன்களுடனும், ரூட் 14 ரன்களுடனும், இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். இந்த இக்கட்டான சூழலில் ஹாரி புரூக் 89 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளிக்க, இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களில் 9 விக்கெட்க்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னெர் 4 விக்கெட்களும், டிம் சவுதி மற்றும் ஸ்காட் குக்கலைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் லாதமை 1 ரன்னில் ஆலி ராபின்சன் வெளியேற்ற, கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸை வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அடுத்ததாக நீல் வாக்னரை ஸ்டூவர்ட் பிராட் 27 ரன்களில் அவுட் செய்ய இது உலக சாதனையாக அமைந்தது.
இந்த விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் டெஸ்ட் வரலாற்றில் 1,000 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பௌலிங் பார்ட்னட்ஷிப் ஆனார்கள்.
இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான கிளென் மெக்ராத் மற்றும் ஷேன் வார்னே 104 போட்டிகளில் இணைந்து 1,001 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இன்னும் இரண்டு விக்கெட்களை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினால், பார்ட்னர்ஷிப் அமைத்து டெஸ்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெருமையை இந்த ஜோடி பெறும்.
இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் 895 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் கோர்ட்னி வால்ஷ் 762 விக்கெட்களுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் 580 விக்கெட்களுடன் 5வது இடத்தில் இருக்கின்றனர்.