England Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கான மாற்று வீரராக, ரஜத் பட்டிதாரை அணியில் சேர்த்து இந்திய கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.


கோலிக்கான மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ:


இங்கிலாந்து அணிக்கான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து, விலகுவதாக கோலி அறிவித்தார். இதையடுத்து அவருக்கான மாற்றாக யாரை சேர்ப்பது என்பதில் பல்வேறு வீரர்களின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன் ஆன, ரஜத் பட்டிதார் கோலிக்கான மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 வயதான இவர் கடந்த வாரம், இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 151 ரன்கள் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்திலும் 111 ரன்கள் குவித்ததோடு, கடந்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ அணியிலும் இடம்பெற்று இருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக பார்ல் மைதானத்தில் நடைபெற்ற, ஒருநாள் போட்டியின் மூலம் பட்டிதார் சர்வதேச அரங்கில் களமிறங்கினார். அதில் தொடக்க வீரராக களமிறங்கிய பட்டிதார், டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புள்ளது.


இந்தியாவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டிலும் தொடங்குகிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவிலும் தொடங்குகிறது.


விலகிய விராட் கோலி:


இந்நிலையில், தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணியை எதிர்கொள்ள விராட் கோலி போன்ற ஒரு அனுபவமிக்க பேட்ஸ்மேன் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படைகிறது. விராட் கோலி இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 2016ம் ஆண்டு நடந்த உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 5 டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 655 ரன்கள் குவித்து அந்த தொடரிலே அதிக ரன்கள் விளாசிய வீரராக திகழ்ந்தார். விராட் கோலி இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 28 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 9 அரைசதங்கள் உள்பட 1991 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணி விவரம்:


ரோகித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஷ் ஐயர், ஜெய்ஷ்வால்,  துருவ் ஜூரல்,  கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ் கான்,  முகமது சிராஜ், முகேஷ் குமார், அஸ்வின்,  ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் .