முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் போட்டி அலுவலர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.


இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்தாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து கிரிக்கெட்டர்களுக்கும் அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும்.


தற்போதுள்ள திட்டத்தின் படி, 2003-04 சீசன் இறுதி வரை 25 முதல் 49 உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனைத்து முதல் தர கிரக்கெட் வீரர்களுக்கும் மாதத்திற்கு 15,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இனிமேல், அவர்களுக்கு 30,000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படும்.


முன்னதாக, 2003-04 சீசன் இறுதி வரை 50 முதல் 74 போட்டிகள் விளையாடிய வீரர்களுக்கு 22,500 ரூபாயும் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியவர்களுக்கு 30,000 ரூபாயம்வழங்கப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட திட்டத்தின் படி, அவர்கள் ஒரு மாதத்திற்கு 45,000 ரூபாயும் 52,500 ரூபாயும் முறையே பெறுவார்கள்.


டிசம்பர் 31, 1993ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்று 25 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனைத்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கும் ரூபாய் 50,000 வழங்கப்பட்டது. ஆனால், புதிய கொள்கையின்படி, இந்தத் தொகை ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 


முன்னதாக, 10 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் 22,500 ரூபாயும் 5 முதல் 9 டெஸ்ட் விளையாடியவர்களுக்கு மாதம் 15,000 ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்டண முறையும் திருத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில், "நமது முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பொருளாதார நலனில் அக்கறை செலுத்துவது மிகவும் முக்கியம். வீரர்கள் உயிர்நாடியாக இருக்கிறார்கள். ஒரு வாரியமாக, அவர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது நமது கடமையாகும். நடுவர்கள் போற்றப்படாத ஹீரோக்கள். பிசிசிஐ அவர்களின் பங்களிப்பை உண்மையிலேயே மதிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "நமது முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நலனே நமக்கு முக்கியம். அவர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டிருப்பது அந்த திசையில் வைக்கப்பட்ட முதற்படி. பல ஆண்டுகளாக நடுவர்கள் அளித்த பங்களிப்பை பிசிசிஐ மதிக்கிறது. மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கான அவர்களின் விடாமுயற்சியான சேவைகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க இது ஒரு வழியாகும்" என்றார்.