டி 20 உலக கோப்பை பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி வருகின்ற 17 ம் தேதி ஜெய்ப்பூரிலும், 2 வது போட்டி 19 ம் தேதி ராஞ்சியிலும், 3 வது மற்றும் கடைசி போட்டி 21 ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
டி 20 உலககோப்பைக்கு பிறகு டி 20 தொடரின் கேப்டன் பதவியிலிருந்து இருந்து விலகிய விராட் கோலி, இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும், கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை தொடர்ந்து தற்போது, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இந்திய டெஸ்ட் அணிக்கான முதல் போட்டியில் அஜிங்கே ரஹானே கேப்டனாக செயல்படுகிறார்.
முழு அணி விவரம் :
அஜிங்கே ரஹானே (C), புஜாரா (துணை கேப்டன் ), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், விருத்திமான் சஹா, கே.எஸ்.பரத், ஜடேஜா, ரவி அஸ்வின், அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசாத் கிருஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள கேப்டன் விராட் கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இணைந்து கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டி 20 தொடரில் கேப்டனாக செயல்பட இருக்கும் தொடக்க வீரர் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை.
நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கீரின் பார்க் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 25 ம் தேதி தொடங்கி 29 வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்மிக்க வான்கேடே மைதானத்தில் வருகிற டிசம்பர் 3 ம் தேதி தொடங்கி 7 ம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது.
நியூலாந்து டெஸ்ட் அணி விவரம் :
கனே வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளெண்டல் ( விக்கெட் கீப்பர்), கான்வே, ஹெண்ட்ரி நிகோலஸ், ஜெம்மிசன், டாம் லதாம், அஜாஜ் பட்டேல், பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, சாண்டனர், சோமர்வில்லி,சௌதீ, ராஸ் டெய்லர், வாக்னர் அல்லது வில் எங்.