ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலககோப்பை டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இந்த தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளை எளிதில் வென்ற இந்தியா, சூப்பர் 12 ஆட்டத்தில் தனது முதல் இரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடன் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, பாகிஸ்தான் அணியுடனான தோல்வியால் உலககோப்பை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில், மர்மநபர் ஒருவர் டுவிட்டரில் இந்திய அணி தோற்றதால் இந்திய கேப்டன் விராட்கோலியின் 9 மாதங்களே ஆன மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு மிரட்டல் விடுத்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அவதூறாக பதிவிட்ட அந்த மர்மநபர் மீது மும்பை மற்றும் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
உடனடியாக சைபர்கிரைம் போலீசார் அந்தமர்ம நபரை தேடினர். அப்போது, அந்த பதிவை பாகிஸ்தானிய பயனர் பயன்படுத்துவது போல காட்டியது. ஆனால், பின்னர் சைபர்கிரைம் போலீசாரின் தீவிர சோதனையை அந்த பதிவையிட்டது இந்தியர் என்றும் அவரது பெயர் ராம்நாகேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்தான் கிரிக்கிரேஸிகேர்ள் என்ற பெயரில் இந்த பதிவை பதிவிட்டுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
ராம்நாகேஷ் யார் என்று விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராம்நாகேஷ் ஸ்ரீனிவாஸ் அகுபதினி என்பது அவரது முழுப்பெயர் ஆகும். 23 வயதே ஆன அவர் ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி உணவு விநியோகிக்கும் செயலியில் ஒரு மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் சேர்வதற்கு ஆயத்தமாக இருந்தார்.
இதுதொடர்பாக, ராம்நாகேஷிடம் மும்பை போலீசார் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ஆத்திரத்தில் அப்படி எழுதினேன். செல்போன் கீழே விழுந்ததால் அது ட்வீட் ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார். அவரது இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் நேற்று அவரைப் பிடித்த போலீசார் மும்பையில் உள்ள சிறையில் அவரை அடைத்துள்ளனர். ராம்நாகேஷ் படிப்பில் மிகவும் சிறந்த மாணவராக இருந்துள்ளார். அவர் ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. தேர்வில் 2367வது ரேங்க் பெற்றுள்ளார். ஐ.ஐ.டி.யிலே டாப் 10 மாணவர்களில் ஒருவராக இருந்த ராம்நாகேஷ் இரவு நேரங்களில் கூட நன்றாக படிக்கக்கூடியவர் என்றும், அவரை பெரும்பாலும் இணையவழி மூலமாகவே தொடர்பு கொள்ள முடியும் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.
ராம்நாகேஷ் கப்பிஸ்தான் ரேடியா என்ற கணக்கை தொடர்ந்து வந்ததாகவும், அதில் விராட்கோலி ரசிகர்களுக்கும், விராட்கோலியின் வெறுப்பாளர்களுக்கும் இடையே டுவிட்டர் மோதல் நடைபெற்றபோதுதான் இந்த பதிவை அவர் பதிவிட்டுள்ளார் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். ஐ.ஐ.டி.யில் படித்த பட்டதாரி இதுபோன்ற கீழ்த்தரமான பதிவை டுவிட் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.