உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்குகிறது. 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


இந்தியா வந்த பாகிஸ்தான்:


உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக மற்ற நாட்டு அணிகள் இந்தியாவில் முகாமிட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விமானம் மூலமாக நேற்று இந்தியா வந்தது.


அவர்கள் நேற்று பாகிஸ்தானில் இருந்து ஹைதரபாத்திற்கு வந்தனர், பாகிஸ்தான் அணி இந்தியா வருவதால் ஹைதரபாத் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தியா வந்த பாகிஸ்தான் அணியை வரவேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சிலரும் விமான நிலைய வாசலில் குவிந்திருந்தனர். அப்போது, பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர் அந்த நாட்டு தேசிய கொடியை ஏந்தியபடி வாசலில் காத்துக் கொண்டிருந்தார்.


பாகிஸ்தான் கொடியுடன் ரசிகர்:


மேலும், அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில கோஷங்களையும் எழுப்பினார். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அந்த நபரை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அந்த நபர் பெயர் பஷீர் என்று தெரிய வந்தது. இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர் ஆவார். அதுவும் பாகிஸ்தான் நாட்டின் தீவிர கிரிக்கெட் ரசிகர் ஆவார்.


பின்னர், அவரது ஆவணங்களையும் பாதுகாப்பு படையினர் பரிசோதனை செய்தனர். அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட் இருப்பதும், அவர் பாகிஸ்தான் ணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளை எல்லாம் நேரில் சென்று பார்த்து பாகிஸ்தான் அணிக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. பஷீர் சாஷா என்று பாகிஸ்தான் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் பாகிஸ்தான் நாட்டில் மிகவும் பிரபலம் ஆவார். மேலும், இந்திய வீரர்கள் தோனி, ரோகித்சர்மா ஆகியோருடனும் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துள்ளனர்.




பலத்த பாதுகாப்பு:


பாகிஸ்தான் அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியா வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது பயிற்சி போட்டியில் ஹைதராபாத்தில் ஆட உள்ளது. இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆடுகின்றனர்.


பாகிஸ்தான் அணி தங்கியுள்ள ஹோட்டல்கள் மற்றும் அவர்கள் மைதானத்திற்கு செல்லும் வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாபிக், பக்கர் ஜமான், இப்திகார் அகமது, இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகில், அக சல்மான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷதாப்கான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, ஷாகின் ஷா அப்ரீடி, உசாமா மிர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். காயம் காரணமாக அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நசீம்ஷா உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கவில்லை.


மேலும் படிக்க: Watch Video: நீ மனுஷன்யா..! ஸ்டாண்ட் இன் கேப்டன் ராகுலுக்கே முன்னுரிமை.. கோப்பையை வாங்கமறுத்த ரோஹித் சர்மா..!


மேலும் படிக்க:  Worldcup Squad: உலகக்கோப்பையில் அக்‌ஷர் அவுட்? தமிழக வீரர் அஷ்வின் இன்? இன்று வெளியாகிறது இந்திய வீரர்கள் இறுதி பட்டியல்