முன்னணி ஜாம்பவான் அணிகளுக்கு அடிக்கடி அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணிகளில் வங்கதேசம் அணி மிகவும் முக்கியமான அணியாகும். அந்த அணி தற்போது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தள்ளது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி தந்த வங்கதேசம்:
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம். இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 274 ரன்களுக்கு அவுட்டானது. வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணியை லிட்டன்தாஸ் சதம் அடித்து மீட்டார். இதனால், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களை எடுத்தது. லிட்டன் தாஸ் 138 ரன்களுக்கு அவுட்டாக, மெஹிதி ஹாசன் 78 ரன்களை எடுத்தார்.
தொடரை வென்று அசத்தல்:
12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேசத்தின் ஹாசன் மகமுத், நகித் ராணா பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதையடுத்து, வெறும் 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று புது வரலாறு படைத்துள்ளது வங்கதேசம். இதை அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லிட்டன்தாஸ் ஆட்டநாயகனாகவும், மெஹிதி ஹாசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விமர்சிக்கும் ரசிகர்கள்:
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் மசூத், பாபர் அசாம், ரிஸ்வான் என யாருமே ஜொலிக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணியை அந்த நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். டி20 உலகக்கோப்பைத் தொடரில் அமெரிக்க அணியுடன் தோல்வி அடைந்தது முதலே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தோல்வி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.