வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அசத்தியுள்ளார். 


வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஷகிப் அல் ஹசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காசி ரெசல் ஹூசனை விட 1,50,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஹுசைன் 45,993 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். தற்போது ஷகிப் அல் ஹசன் தேர்தலுக்காக கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற  நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


சர்வதேச கிரிக்கெட்டில், ஷகிப் அல் ஹசன் கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடினார். இந்த உலகக் கோப்பையில் ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியை வழிநடத்தினார். 


கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ஷகிப் அல் ஹசன்..? 


தற்போது எம்பியாக வெற்றி பெற்றுள்ள ஷகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்வாரா? அல்லது ஓய்வு பெறுவாரா என்பது தெரியவில்லை. ஆனால்,  அரசியலுக்கு வந்த பிறகும், ஷகிப் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார் என்றும், இரண்டு பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார். 


300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நேற்று) வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே எண்ணும் பணி தொடங்கியது. தேர்தல் முடிவுகளில் அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் 200 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்த தகவலை தேர்தல் கமிஷன் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்


. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்ற போது, அவாமி லீக் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவாமி லீக் கட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணித்தன. அது ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சிக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குப்பதிவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 2018ல் 80 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு இம்முறை பாதியாக குறைந்துள்ளது.


ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் வாழ்க்கை: 


36 வயதான ஷகிப் அல் ஹசன் சர்வதேச கிரிக்கெட்டில் 66 டெஸ்ட், 247 ஒருநாள் மற்றும் 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் டெஸ்ட் போட்டியில் 39 சராசரியுடன் 4,454 ரன்களும், 233 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 247 ஒருநாள் போட்டிகளில் 37 சராசரியில் 7,570 ரன்கள் எடுத்த ஷகிப், பந்துவீச்சில் 317 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், டி20யில் 23 சராசரியில் 2,382 ரன்கள் எடுத்த ஷகிப், பந்துவீச்சில் 140 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் செயல்பட்டார். இருப்பினும், அவரது தலைமையின் கீழ் வங்கதேச அணி உலகக் கோப்பையில் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து, அவரது ஓய்வு குறித்த விவாதம் தொடங்கியது. ஆனால் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பிறகு, தான் இன்னும் ஓய்வு பெறப் போவதில்லை என்று ஷகிப் தெளிவுபடுத்தியிருந்தார். அரசியலில் இருந்தாலும் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.