இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தொடங்கி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் வரை பெரும்பாலானவர்களிடம் ஒரு உரையாடல் இருந்து வருகின்றது. அது வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதிவரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடம் உள்ளதா இல்லையா என்பதுதான்.
இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிவரை முன்னேறி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தது. 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி அதுதான். இறுதிப் போட்டிவரை இந்திய அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி இருந்தால் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு சிறப்பான பிரியாவிடை கொடுத்திருக்கலாம்.
ஆனால் இந்திய அணி கோப்பையை தவறவிட்டது. இந்நிலையில் இருவருக்கும் சிறப்பான பிரியாவிடை கொடுக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. வரும் டி20 உலகக் கோப்பையினை இந்திய அணி கட்டாயம் வென்று அதனை ரோகித் மற்றும் விராட் கோலியின் வாழ்க்கையில் முக்கிய தருணமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. இதற்காகத்தான் 14 மாதங்களுக்குப் பிறகு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் மற்றும் விராட் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் மற்றும் விராட் கோலி கட்டாயம் இருக்கவேண்டும் என பலர் தங்களது கருத்தினை தெரிவித்துவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி டி20 உலகக் கோபைக்கான இந்திய அணியில் கட்டாயம் ரோகித் மற்றும் விராட் கோலி இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அதிலும் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை இரு தூண்களாக நின்று இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றனர். இவர்கள் கட்டாயம் அணியில் இடம்பெறவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் கூறியதாவது, “நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் கட்டாயம் இருக்க வேண்டும். இவர்களின் கடந்த ஐபிஎல்- லீக்கில் இருந்து மிகச் சிறப்பாக உள்ளது. இம்முறை உலகக் கோப்பை கிரிக்கெட் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீஸிலும் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் மைதானம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. இப்படியான நிலையில் அங்கு சூழலை உணர்ந்து விளையாட அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. எனவே அணியில் கட்டாயம் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இருக்க வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் நினைக்கின்றேன். டி20 உலகக் கோப்பையில் விளையாட ரோகித் சர்மாவும் விராட் கோலியும் என்ன நினைக்கின்றார்கள் எனத் தெரியவில்லை மேலும், அணி நிர்வாகமும் என்ன நினைக்கின்றது எனத் தெரியவில்லை. அணி நிர்வாகத்தின் தரப்பில் அதிகபட்சமாக ரோகித் மற்றும் விராட் கோலியின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பலாம், ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் இருவரும் 2024ஆம் ஆண்டிற்கான டி20 இந்திய அணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். இவர்கள் இருந்தால் இந்திய அணி கட்டாயம் கோப்பையை வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.