Shakib Al Hasan: வங்கதேச கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான ஷகிப் அல் ஹசன், ரசிகரை கன்னத்தில் அறைந்த வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ரசிகரை அறைந்த ஷகிப் அல் ஹசன்:


சமீபகாலமாக, ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட்டை திறமைகளை தாண்டி,  தனது கோபத்திற்காகவே அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். வங்கதேச கிரிகெட் அணியின் கேப்டனான இவர்,  நடுவர்களிடம் கூச்சலிட்டு பேசுவது,  ஸ்டம்புகளை உதைப்பது மூலம் விரக்தியை வெளிப்படுத்துவது போன்ற நிகழ்வுகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வரிசையில் தற்போது ஷகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






காரணம் என்ன?


வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், ஷகிப் வாக்களிக்க வந்த வாக்குச்சாவடியில் ரசிகரை தாக்கிய சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷகிப்பின் கோபத்திற்கு காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. அதேநேரம், பெரும் கூட்டம் அவரை சூழ்ந்தபோது ஏற்பட்ட குழப்பத்தால், ஷகிப் அந்த ரசிகரை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் கிரிக்கெட் நட்சத்திரமாகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷகிப் அல் ஹசன் பொதுவெளியில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பும் ஷகிப் அல் ஹசன் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதில், பரப்புரை  மேடையில் அமர்ந்து இருந்த ஷகிப்பிடம் செல்பி எடுக்க ரசிகர்கள்அணுகினர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் போதும் அவரது முகம் கடுகடுவென இருந்தது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி:


இதனிடையே, வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்ட ஷகிப் அல் ஹசன் வெற்றிபெற்று எம்.பி., ஆகியுள்ளார். ஷகிப் அல் ஹசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காசி ரெசல் ஹூசனை விட 1,50,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஹுசைன் 45,993 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். தற்போது ஷகிப் அல் ஹசன் தேர்தலுக்காக கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற  நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சர்வதேச கிரிக்கெட்டில், ஷகிப் அல் ஹசன் கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடினார். இந்த உலகக் கோப்பையில் ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியை வழிநடத்தினார்.