ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை போட்டித் தொடருக்கான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று இரண்டு பிரிவுகளிலும் இலங்கை, வங்காள தேசம் உள்பட எட்டு அணிகள் மோதி வருகின்றன.


இந்த நிலையில், அல் அமீரகத்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வங்காளதேசம் அணியும், பப்புவா நியூ கினியா அணியும் நேருக்கு நேர் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 181 ரன்களை குவித்தது. இதையடுத்து, 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.




வங்காள தேசத்தில் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே, உலககோப்பை டி20 ஆட்டங்களில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். இதன்மூலம் ஷகிப் அல் ஹசன் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.


2007ம் ஆண்டு முதல் உலககோப்பை டி20 போட்டிகளில் ஆடி வரும் ஷகிப் அல் ஹசன் 28 போட்டிகளில் ஆடி 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி உள்ளார். அவர் 2007ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான உலககோப்பை போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் 34 போட்டிகளில் ஆடி 34 போட்டிகளிலும் பந்துவீசி 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.




மூன்றாவது இடத்தில் இலங்கையில் லசித் மலிங்கா 38 விக்கெட்டுகளுடனும், 4வது இடத்தில் பாகிஸ்தானில் சயித் அஜ்மல் 36 விக்கெட்டுகளுடனும், 5வது இடத்தில் இலங்கையின் அஜந்தா மென்டிசும் உள்ளனர். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 10 வீரர்கள் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாருமே இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக அஸ்வின் 15 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண