கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் மற்றும் அபாயகரமான அணியாக விளங்கி வரும் அணி வங்காளதேச அணி. இந்த அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இதில், செஞ்சூரியனின் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலே முதன்முறையாக வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றிக்கனியை ருசித்துள்ளது.




இந்த போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய வங்காளதேச அணியின் கேப்டன் தமீம் இக்பாலும், லிட்டன் தாசும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தபோது தமீம் இக்பால் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் அரைசதம் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், களமிறங்கிய விக்கெட் கீப்பர் முஸ்தபிகீர் ரஹீம் 9 ரன்களில் வெளியேறினார்.


ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ஷகிப் அல்ஹசனும், யாசீர் அலியும் அதிரடியாக ஆடினர். இருவரும் இணைந்து வங்காளதேசத்தில் ரன்களை உயர்த்தினர்.  124 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 239 ரன்கள் எட்டியபோதுதான் பிரிந்தது. ஷகிப் அல் ஹசன் 64 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த யாசீர் அலியும் 50 ரன்கள் எட்டிய நிலையில் அவுட்டானார். 44 பந்தில் 4 பவுண்டரியுடன் 2 சிக்ஸர்களை அவர் அடித்திருந்தார். அடுத்து களமிறங்கிய மஹமதுல்லா 17 பந்தில் 25 ரன்களையும், ஆபீப் ஹொசைன் 13 பந்தில் 17 ரன்களையும், மெஹதி ஹாசன் 13 பந்தில் 19 ரன்களையும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களை வங்காளதேசம் ரன்களை எடுத்தது.




பின்னர், 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மலான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கைல் வெரிரெய்ன் 21 ரன்களிலும் மார்க்ரம் டக் அவுட்டாகியும் ஏமாற்றம் அளித்தார். 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க தடுமாறியது. பின்னர், கேப்டன் தெம்பா பவுமாவும், வான்டர் டுசென்னும் இணைந்து நிதானமாக அணியை மீட்டனர்.


அணியின் ஸ்கோர் 121 ரன்களை எட்டியபோது நிதானமாக ஆடிய கேப்டன் தெம்பா பவுமா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியில் இறங்கினார். இதனால், தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் மளமளவென உயரத்தொடங்கியது. அப்போது, பொறுப்புடன் ஆடி வந்த வான்டர் டுசென் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 98  பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்ஸருடன் இந்த ரன்களை எடுத்திருந்தார்.




வான்டர் டுசென் ஆட்டமிழந்த பிறகு, தென்னாப்பிரிக்க வீரர்கள் யாரும் டேவிட் மில்லருக்கு நிலையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆண்டிலே பெலுக்வாயோ 2 ரன்னிலும், ஜான்சென் 2 ரன்னிலும், ரபாடா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தனி ஆளாக போராடிய டேவிட் மில்லர் 9வது விக்கெட்டாக வெளியேறினார். அவர் 57 பந்தில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேசவ் மகாராஜ் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 48.5 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், வங்காளதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்தாண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலே முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி சாதனை படைத்திருந்தது. தற்போது, தென்னாப்பிரிக்க அணியையும் அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த வங்காளதேச அணியினர் ஆசிய கோப்பையையும், உலககோப்பையையும் வெல்ல வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்று பேட்டியளித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண