டி20 உலகக் கோப்பை தொடர் குரூப் பி பிரிவில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் தகுதிபெற்றது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி, வங்காளதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணி குரூப் பி பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதிபெறும் என்றிருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். கடந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி அரைசதம் கடந்த லிட்டன் தாஸ், இந்த போட்டியில் வெறும் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த செளமியா சர்கார் 20 ரன்களில் வெளியேற, பின்னால் வந்த வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசனும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். மறுபுறம் நங்கூரம் போல் நச்சென்று நின்ற நஜ்முல் ஹொசைன் சாண்டோ 78 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து இப்டிகர் அகமது வீசிய 14 வது ஓவரில் க்ளீன் போல்டானார்.
அடுத்து களம் கண்ட அஃபிஃப் ஹொசைன் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து 24 ரன்கள் அடித்து ஆதர்வு அளித்தார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்களும், சதாப் கான் 2 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் ரிஸ்வான் மற்றும் கேப்டம் பாபர் அசாம் வந்தனர். வழக்கம்போல் கேப்டன் பாபர் அசாம் 25 ரன்களுடன் ஏமாற்றம் அளிக்க, நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 32 ரன்களில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 57 ரன்கள் எடுத்தது.
உள்ளே வந்த முகமது நவாஸ் 11 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின் வரிசையில் வந்த முகமது ஹரீஸ் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.
அடுத்து ஜோடி சேர்ந்த ஷான் முகமது மற்றும் இப்திகார் அகமது கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி பாகிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் இந்தியாவுடன் இணைந்து அரையிறுதிக்கு சென்றது.