டி20 உலகக் கோப்பை தொடர் குரூப் பி பிரிவில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் தகுதிபெற்றது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி, வங்காளதேச அணியை எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணி குரூப் பி பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதிபெறும். அதே சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு இந்த உலகக் கோப்பைப் பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதேபோல், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொள்கிறது.


தென்னாப்பிரிக்கா அணியின் தொடர் தோல்வி :


டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் 5 புள்ளிகளுடன் இருந்த தென்னாப்பிரிக்க அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஐசிசி தொடர்களின் முக்கிய போட்டிகளில் தோல்வியுற்று வெளியேறும் தென்னாப்பிரிக்கா அணியின் சோகம் தொடர்கிறது. 


தென்னாப்பிரிக்கா இந்த உலகக் கோப்பை தொடரின்போது வலுவான முறையில் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று ஒரு போட்டி மழையால் முடிவடையவில்லை. இருப்பினும், நான்காவது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த பிறகு, அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 






இதையடுத்து, இன்றைய போட்டியில் நெதர்லாந்தை தோற்கடித்து தென்னாப்பிரிக்க அணி எளிதில் அரையிறுதியை எட்டும் என்று நம்பப்பட்டது. அதே நேரத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி அரையிறுதி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியாவை அரையிறுதி சுற்றுக்கு தள்ளிவிட்டது. 


குரூப் பி பிரிவில் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு செல்லப்போவது யார்?


தென்னாப்பிரிக்காவின் தோல்வியால், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணி அரையிறுதிக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கும் அரையிறுதி கதவுகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது இந்தியாவுடன் அரையிறுதிக்கு செல்லும்.


வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு:






பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தற்போது, 15 ஓவர் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.