ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போதே திட்டமிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகி நியூசிலாந்து சென்றார்.
தொடர்ந்து இவருக்கு பதிலாக தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி அடிப்படை தொகையாக 20 லட்சத்திற்கு வாங்கியது.
நியூசிலாந்து சென்றபோது கேன் வில்லியம்சனுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதில், கேன் வில்லியம்சனின் அவரது வலது முழங்காலில் உள்ள முன்பக்க தசைநார் கிழிந்ததால், விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த காயம் காரணமாக கேன் வில்லியம்சன் வருகின்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டேட் தெரிவிக்கையில், “கேன் வில்லியம்சன் வருகின்ற அக்டோபரில் தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட தயாராக இருக்க வாய்ப்பில்லை. ” என்றார்.
”இயற்கையாகவே இதுபோன்ற காயம் ஏற்படுவது சகஜம்தான். இந்த நேரத்தில் எனக்கு காயம் ஏற்பட்டது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், காயத்திலிருந்து குணமடைந்து மீண்டு வருவதே சிறந்த முடிவு. என்ன இதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும், ஆனால் விரைவில் களத்தில் இறக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
கேன் வில்லியம்சன் இல்லாதது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி இதுவரை உலகக்கோப்பையை வெல்லவில்லை என்றாலும், சிறப்பாகவே செயல்பட்டது. கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு சென்று இரண்டாம் இடம் பிடித்தது.