துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதுவரை 50 ஓவர்கள், டி20 உலகக் கோப்பையில் 12 முறை இந்திய அணியை எதிர்கொண்டு தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, 13-வது முறையாக வென்றுள்ளது. ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் , கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்துவரும் பாகிஸ்தான் இதுவரை ஒருமுறைகூட வெல்லமுடியாமல் பெரும் சுமையாக சுமந்துவந்தது. அந்த பிரச்சினை பாபர் ஆஸம் மூலம் தீர்க்கப்பட்டது. ஆனால் போட்டி முழுவதும் இந்தியா பாகிஸ்தான் அணி வீரர்கள் இயக்கத்துடன் விளையாடியது நாட்டிற்கே சமத்துவ பாடம் எடுத்தது. கோலி தோனி ஆகியோர் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் உரையாடும் படங்கள் வைரலாகி வருகின்றன.



அதனை பலர் பாராட்டி வந்தாலும், பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததை மானக்கேடாக கருதும் சில விஷமிகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். பாகிஸ்தான் அணியிடம் போய் தோல்வி அடைந்துவிட்டீர்களே. நாம் அவர்களிடம் உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததே இல்லை. இது மிகப்பெரிய அவமானம். இந்திய அணியின் கேப்டன் கோலியை நீக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் வைத்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்திய பவுலர் முகமது ஷமியை குறி வைத்து சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நேற்று ஷமி வீசிய 18 வது ஓவரில் வெறும் 5 பந்துகளில் 17 ரன்கள் சென்றது. அந்த ஒரு ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகள் சென்றன. அந்த ஓவரில்தான் பாபர் ஆட்டத்தை பினிஷ் செய்தார். ஆனால் அதற்கு முன்பே ஆட்டம் இந்தியாவின் கையைவிட்டு சென்றுவிட்டது.



இந்திய பவுலர்கள் யாருமே நேற்று பெரிதாக பவுலிங் செய்யவில்லை. ஒரு வீரரால் கூட நேற்று விக்கெட் எடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் ஷமி போட்ட ஓவரால்தான் நாம் தோல்வி அடைந்தோம் என்று நெட்டிசன்கள் சிலர் மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது ஷமியை இஸ்லாமியர் என்று கூறி கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அவர் மீது மத ரீதியாக கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவரின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு கீழே முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகளை சொல்லி அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். அருவெறுக்கத்தக்க வகையில் நிறைய கமெண்ட்கள் இவரின் இஸ்டா பக்கத்தில் போடப்பட்டு வருகிறது. இந்திய அணியின் தோல்வியை மத ரீதியாக ஒரு கும்பல் திசை திருப்ப தொடங்கி உள்ளது. இந்திய அணியில் நேற்று எந்த பவுலரும் சரியாக ஆடாத நிலையில் இஸ்லாமியர் என்றே ஒரே காரணத்திற்காக ஷமியை மிக கடுமையான வார்த்தைகளால் சில விஷமிகள் விமர்சனம் செய்து வருவது பெரிய சர்ச்சையாகி உள்ளது.