பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர். இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
மன்கட் செய்த பரூக்கி:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி குர்பாஸின் அபாரமான 151 ரன்கள், ஜட்ரானின் 80 ரன்களால் 50 ஓவர்கள் முடிவில் 300 ரன்களை எடுத்தது. 301 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் பக்கர் ஜமான் 30 ரன்களில் அவுட்டானாலும், இமாம் உல் ஹக் – பாபர் அசாம் ஜோடி சிறப்பாக ஆடியது.
இவர்கள் நிதானமாக ஆடினர். முக்கியமான கட்டத்தில் பாபர் அசாம் 53 ரன்களிலும், இமாம் உல் ஹக் 91 ரன்களிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் விக்கெட்டுகளை சீட்டுக்கட்டு போல இழந்தது. கடைசியில் ஷதாப்கான் அதிரடியாக ஆட ஆட்டத்தில் சூடுபிடித்தது.
49-வது ஓவரின் கடைசி பந்தில் ஷதாப்கான் பரூக்கியால் மன்கட் முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷதாப்கானை பரூக்கி மன்கட் செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஒரு பந்து மீதம் வைத்து நசீம்ஷா அடித்த பவுண்டரியால் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.
கோபத்தின் உச்சியில் பாபர் அசாம்:
ஷதாப்கானை மன்கட் செய்தது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கடும் எரிச்சலும் கோபமும் அடையச் செய்தது, போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகொடுத்துக் கொள்ளும்போது மிக இறுக்கமான முகத்துடன் பாபர் அசாம் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுத்தார்.
அப்போது, ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது நபியிடம் ஏதோ கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், நடுவர்கள் தலையிட்டு பாபர் அசாமை சமாதானம் செய்து அனுப்பினர். கிரிக்கெட் விதிப்படி மன்கட் என்பது சரி என்றாலும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் மன்கட் முறையில் ஒரு வீரரை அவுட்டாக்குவதை பெரியளவில் விரும்புவதில்லை என்பதே உண்மை ஆகும்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி போலவே, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். பாகிஸ்தான் அணி பலமான அணி என்றாலும், ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான பவுலிங் மூலம் பாகிஸ்தான் அணியை அச்சுறுத்தியது என்பதே உண்மை.
மேலும் படிக்க: Asia Cup 2023: ஆறு நாட்கள் நோ ரெஸ்ட்! ஜிம், நீச்சல், ஓட்டம், யோகா என தொடர் பயிற்சி… கோலி, ரோஹித்தையும் வாட்டிவதைக்கும் NCA!
மேலும் படிக்க: ICC World Cup 2023: சந்திரயான் 3 வெற்றி; அதனால் உலகக்கோப்பை நமக்குதான்: மும்பை இந்தியன்ஸ்!