சந்திரயான்-3 நேற்று அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது முழு நாட்டிற்கும் பெருமையான தருணமானதால் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியது.  இதன் மூலம் நிலவில் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சந்திரயான்-2 சந்திர மேற்பரப்பை அடையும் பணி முழுமையடையாமல் தோல்வியில் முடிந்தது. அதே ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிகழ்வை ஒப்பிட்டு இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது.




அது 2019ஆம், ஆண்டு இந்திய சந்திராயன் 2 முயற்சியில் தோல்வியைத் தழுவியது. அதேபோல் அந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை போராடி கோப்பையைத் தவறவிட்டது. இந்த தொடரில் லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதிவரை மட்டுமே இந்திய அணி ஆடியது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மொத்தம் 5 சதங்களை பறக்கவிட்டு இருந்தார். இது ஒரு சீசனில் ஒரு அணியின் வீரர் 5 சதங்களை அடிப்பது இதுவே முதல் முறையாக உலகக்கோப்பை வரலாற்றில் பதிவானது. மிகவும் வலிமையான அணியாக வலம் வந்த இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.




இந்நிலையில் இந்தியா இம்முறை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளதால் இந்திய கிரிக்கெட் அணியும் இம்முறை உலகக்கோப்பையை வெல்லும் என மும்பை இந்தியன்ஸ் அணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருவதுடன், இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர். 






இம்முறை இந்தியாவே உலகக்கோப்பையை நடத்துவதால் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.