ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்:
அண்மையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி, ஒயிட்-வாஷ் ஆவது இதுவே முதல்முறையாகும். இங்கிலாந்து உடனான டி20 தொடரையும் பாகிஸ்தான் இழந்த நிலையில், உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதிப்போட்டியிலும் தோல்வியடைந்தது.
அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்ததன் காரணமாகவும், அணி தேர்வு விவகாரத்திலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளன தலைவர் ரமீஸ் ராஜா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, அப்பதவியில் இருந்து ரமீஸ் ராஜா அண்மையில் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இடைக்கால தேர்வுக்குழு:
அதைதொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் தலைமையிலான குழு கலைக்கப்பட்டு, இடைக்கால தேர்வுக்குழு தலைவராக, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான, அணியை மட்டும் தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாபர் அசாம் செய்தியாளர் சந்திப்பு:
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, கேப்டன் பாபர் அசாம் முதல்முறையாக தனது மவுனத்தை கலைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 3-4 நாட்களில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. துறைசார்ந்த நபராக இதுபோன்ற சூழ்நிலைகளை பலரும் கடந்து வந்திருப்போம். ஆனால், களத்தில் உழைப்பைக் கொடுப்பதும், அணிக்காக எங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுவதும்தான் முக்கியமான வேலை.
அந்த விஷயங்கள் களத்திற்கு வெளியே நடைபெறுகின்றன. அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் ஒரு நல்ல தொடக்கம் பெறுவது மற்றும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவது எப்படி என்பதில் எங்களது கவனம் உள்ளது. கடந்த தொடரில் அவர்கள் சிறிய தவறுகளை மட்டுமே செய்ததால் எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் அந்த தவறுகளை சரிசெய்ய நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்" என பாபர் அசாம் கூறினார்.
நியூசிலாந்து உடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கராச்சியில் நாளை தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் டிம் சவுதி தலைமையில் நியூசிலாந்து அணி களம் காண உள்ளது.