இந்தியா - வங்கதேசம்:


இந்தியா மற்றும் வங்கதேசம் உடனான  இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை டாக்கா மைதானத்தில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது. 


இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய  இந்திய அணியில் கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து  விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம் அதிரடியாக விளையாடி ரிஷப் பண்ட் 93 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி  86.3 ஓவர்களில் 314 ரன்களில் ஆல்-அவுட்டானது. இதனையடுத்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


தடுமாறிய இந்திய அணி:


இதையடுத்து, 145 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், சுப்மன் கில், கே.எல். ராகுல், புஜாரா மற்றும் கோலி ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  இந்தனால், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 37 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து 4வது நாள் தொடங்கிய இந்திய அணி, ஜெய்தேவ் உனத்கட்டை இழந்தது.  அதன் தொடர்ச்சியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 9 ரன்களை எடுத்து மெகிடி ஹாசன் பந்து வீச்சில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியாவின் வெற்றி என்பது கேள்விக்குறியானது.


ஆட்டநாயகன் விருது வென்ற அஸ்வின்:


ஆனால் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த  ஷ்ரேயஸ் ஐயர்- அஸ்வின் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வங்கதேசத்தின் பந்துவீச்சில் அஸ்திவாரத்தை ஆட்ட தொடங்கினர். இருவரும் தேவையான நேரத்தில் பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.  இதன் மூலம், இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்திய அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின், 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட  42 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.  இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்திய அஸ்வின், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்டதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் தொடரை வெல்ல உறுதுணையாக இருந்த அஸ்வினை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 






அணியிலிருந்து அஷ்வின் நீக்கப்படலாம்? 


அந்த வகையில் அஸ்வினின் செயல்பாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நெருக்கடியான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒருவழியாக வெற்றி பெற்றுள்ளது.  நீண்ட காயம் பட்டியல் மற்றும் தேர்வுக்குழுவில் உள்ள சலசலப்பு இருந்தபோதிலும், அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். அதுதான் தற்போது என்னுடைய கவலையாக உள்ளது.


ஏனெனில் அவர்  அடுத்த போட்டியில் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இந்திய - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு, இரண்டாவது போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அஸ்வின் குறித்த தனது கவலையை சசிதரூர் தெரிவித்துள்ளார்.