Babar Azam: பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான கேப்டனாக, பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.


மீண்டும் கேப்டன் ஆன பாபர் அசாம்:


பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்தின் பிசிபியின் தேர்வுக் குழுவின் ஏகமனதான பரிந்துரையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஒயிட்-பால்  கேப்டனாக பாபர் ஆசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டது. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. 


 






பதவி பறிப்பும், படுதோல்வியும்:


உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டல், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, அந்த அணிக்கு மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் அசாமின் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து, 20 ஓவர் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். ஒருநாள் போட்டிக்கான அணிக்கு கேப்டன் யாரும் நியமிக்கப்படவில்லை.  ஆனால், அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் ஆகியோரின் செயல்பாட்டின் மீது, பாகிதான் கிரிக்கெட் வாரிய தலைவரான மொசின் நக்விக்கு திருப்தியில்லை என தகவல்கள் வெளியானது. இதனால், விரைவிலேயே புதிய கேப்டன்கள் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தான், பாபர் அசாமே மீண்டும் பாகிஸ்தான் அணியின் ஒயிட் பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், வரும் ஜுன் மாதத்தில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி மீண்டும் பாபர் அசாம் தலைமையில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரிலும், இங்கிலாந்திற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.


ஷாகீன் ஷா அஃப்ரிடி அதிருப்தி:


இதனிடையே,  கேப்டன்ஷிப் மாற்றம் தொடர்பாக, கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தன்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை என ஷகீன் ஷா அஃப்ரிடி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அஃப்ரிடி தலைமையிலான முதல் டி-20 தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 4-1 என தொடரை இழந்தது. பாகிஸ்தான் சூப்பர் லீகிலும் அவரது தலைமையிலான, லாகூர் குவாலேண்டர்ஸ் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது.