ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி என சி.எஸ்.கே அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது.


அந்த வகையில் 4 புள்ளிகளை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை விசாகப்பட்டிணத்தில் நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.


முன்னதாக கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக ஐ.பி.எல் போட்டியில் களம் இறங்கிய அவர் 15 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 37 ரன்களை விளாசினார். அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்களை எடுத்தார்.


இது என்னுடைய புதிய ரோல்:


இந்நிலையில், தனது டி20 வாழ்க்கையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியது இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ நான் என்னுடைய டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியதில்லை. ஆறு அல்லது ஏழாவது இடத்தில்தான் அதிகம் பேட்டிங் செய்திருக்கிறேன்.


தற்பொழுது எனக்கு கிடைத்திருப்பது ஒரு புதிய ரோல். ஆனால், நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் விளையாட்டை விளையாடுவதின் மூலம் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். சி.எஸ்.கே. அணியில் விளையாட்டை விளையாடுவதற்கான சுதந்திரம் இருக்கிறது. 


நான் பேட்டிங் மட்டுமில்லாமல் எப்பொழுதும் பந்து வீச தயாராகவே இருக்கிறேன். உங்கள் அணியில் உள்ள முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவர் பந்து வீச முடிந்தால் அது அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் தொடர்ந்து ஆல் ரவுண்டராகவே இருக்க விரும்புகிறேன். நிச்சயமாக சி.எஸ்.கே. ஒரு குடும்பம் போன்றது”என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: T20I World Cup: டி20 உலகக் கோப்பை திருவிழா! இந்திய அணி வீரர்கள் பட்டியல் எப்போது ரிலீஸ்?


மேலும் படிக்க: IPL 2024 LSG Vs PBKS: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..முதல் வெற்றியை பதிவு செய்யுமா?