கிரிக்கெட் உலகில் தற்போது ரசிகர்கள் மத்தியில் உரையாடலுக்கு ஆளாகியுள்ள கிரிக்கெட் வீரர் என்றால் அது ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர்  சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதுதான். அண்மையில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேவிட் வார்னர். இதனால் தற்போது கிரிக்கெட் உலகில் இவரது அடுத்த நடவடிக்கை என்னவாகும் இருக்கும் என்பதுதான் பேச்சாக மாறியுள்ளது. 


இதுதொடர்பாக பேசியுள்ள டேவிட் வார்னர், ”நான் பின்னர் பயிற்சியாளராக வேண்டும் என யோசித்து வருகின்றேன். சில காலத்திற்கு நான் பயிற்சியாளராக செயலாற்ற எனக்கு அனுமதி கிடைக்குமா என்று முதலில் எனது மனைவியுடன் பேச வேண்டும். அண்மை காலங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் மிகவும் ஆக்ரோசமாக நிகழும் வம்பிழுக்கும் செயல்கள் குறைந்து வருகின்ற்து.  ஐபிஎல், பிபிஎல் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் விளையாடும்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் போட்டியாளர்களுடன் உடை மாற்றும் அறைகளை பகிர்ந்து கொள்வதால் இனி ஆடுகளத்தில் வீரர்களுக்கு மத்தியில் ஆக்ரோசமாக வம்பிழுக்கும் செயல் என்பது வரும் காலங்களில் இல்லாமல் போகும். 





கடந்த காலங்களில் இருந்ததைப் போல் இனி மிகவும் ஆக்ரோசமான ஸ்லெட்ஜிங்கையோ அல்லது அதுபோன்ற எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் அதன் அளவு பெருமளவு குறைந்து அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாக இருக்காது என நான் நம்புகின்றேன். குறிப்பாக நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான தொடரில் நானும் ஷாஹீன் ஷா அப்ரிடியும்  சிரித்துக்கொண்டதைப் போன்று கொஞ்சம் கேலி, விளையாட்டு  நிறைந்ததாக இருக்கும்.  நான் ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கின்றேன் என்றால் அது லீக் கிரிக்கெட்டில் விளையாடும் அணிக்கோ அல்லது சர்வதேச அணிக்கோ எந்தவகை அணிக்கு நான் பயிற்சியாளராக இருந்தால் வீரர்களிடம் வம்பிழுக்கும் திட்டம் இருந்தால் அதனை செய்யக்கூடாது என கூறுவதுடன் அதனை இல்லாமலும் மாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.



வார்னர் குறிப்பிடும் விளையாட்டின்போது வீரர்களை வம்பிழுப்பது என்பதில் கைதேர்ந்த அணி என்றால் அதனை கிரிக்கெட் உலகம் குறித்து நன்கு தெரிந்த அனைவரும் ஆஸ்திரேலியா என கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள். பொத்தாம் பொதுவாக ஆஸ்திரேலியா அணியின் மீது இந்த குற்றச்சாட்டினை நாம் முன்வைக்கவில்லை. எதிர் அணியில் இருக்கும் வீரர்களை கோபத்திற்கு உள்ளாக்கி அவர்களுக்கு விளையாட்டின்மீது இருக்கும் கவனத்தினை சிதறடித்து உணர்ச்சிவசப்படச் செய்து போட்டியின் முடிவினை தங்களுக்கு சாதகமாக மாற்ற அணியாகவும் தனித்தனி வீரராகவும் செயல்பட்ட வரலாறு ஆஸ்திரேலியா அணிக்கு உள்ளது. இதனை மனதில் வைத்துத்தான் டேவிட் வார்னர் இதுபோன்ற கருத்தைக் கூறியுள்ளார் என கிரிக்கெட் உலகில் பேச்சுக்கள் அடிபடுகின்றது.