உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்ற மோதலில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடையே மல்லுகட்டு நடந்து வருகிறது. இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலியா சென்ற நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
குறுக்கே வந்த கெளசிக்காக மழை:
இதையடுத்து, இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
காப்பாவில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்தது. பின்னர், மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் ஆட்டம் மழையால் தடைபட்டது.
குளம்போல தேங்கிய தண்ணீர்:
மழை நின்ற பிறகு ஆட்டத்தை மீண்டும் தொடங்கினர். ஆனாலும் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் உணவு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வரை ஆஸ்திரலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை. ஆடுகளம் தரைவிரிப்பான்களால் மூடப்பட்டிருந்தாலும் மைதானத்தில் அவுட்ஃபீல்ட்டில் தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் சில மணி நேரங்களில் மழை நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளே வந்த ஆகாஷ் தீப், ஜடேஜா:
இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் இந்திய அணிக்கு உள்ளது. உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடந்த போட்டியில் விளையாடிய அஸ்வின், ஹர்ஷித் ராணா இருவரும் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டு ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா இருவரும் களமிறங்கி உள்ளனர்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன்கில், ரிஷப்பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் தலைமையில் கவாஜா, மெக்ஸ்வீனி, லபுஷேனே, ஸ்டீவ் ஸ்மித், ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், ஸ்டார், லயன், ஹேசில்வுட் களமிறங்கியுள்ளனர். கடந்த போட்டியில் ஆடாத ஹேசில்வுட் ஆடி வருகின்றனர்.
பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றி இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் தனது வெற்றியை தொடரும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.