ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக வலம் வருபவர் ஆரோன்பிஞ்ச். அதிரடி பேட்ஸ்மேனான ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், பிஞ்ச் ரசிகர்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் நாளை நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியே இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி ஆகும்.




இதனால், ஆரோன் பிஞ்ச் நாளை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார். 35 வயதான ஆரோன் பிஞ்ச் கடந்த சில காலமாகவே பேட்டிங்கில் பார்மின்றி தவித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலககோப்பைத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பிஞ்ச் பேட்டிங் பார்ம் இல்லாமல் இருப்பது அந்த நாட்டு ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.






இந்த சூழலில், ஆரோன்பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 35 வயதான ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் ஆடி 17 சதங்கள் விளாசியுள்ளார். 30 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 153 ரன்களை ஒருநாள் போட்டியில் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 5 ஆயிரத்து 41 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை நாட் அவுட்டாகவும் இருந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆரோன் பிஞ்ச் 4வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 29 சதங்களுடன் உள்ளார். இரண்டாவது இடத்தில் டேவிட் வார்னர் 18 சதங்களுடனும், மூன்றாவது இடத்தில் முன்னாள் வீரர் மார்க் வாக் 18 சதங்களுடனும் உள்ளனர். 5வது இடத்தில் கில்கிறிஸ்ட் 16 சதங்களுடன் உள்ளார். ஆரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு விராட்கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். 




ஆரோன் பிஞ்ச் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 278 ரன்களை எடுத்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும். 92 டி20 போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 17 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 855 ரன்களை எடுத்துள்ளார். ஐ.பி.எல்.லில் 92 போட்டிகளில் ஆடி 15 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 91 ரன்களை எடுத்துள்ளார். ஐ.பி.எல், தொடரில் புதியதாக வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தவிர மீதமுள்ள அனைத்து அணிகளுக்காகவும் ஆடிய ஒரே வீரர் ஆரோன் பிஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.