இந்திய கிரிக்கெட் ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் விளாசி அசத்தினார். அதிலும் குறிப்பாக 1020 நாட்களுக்கு பிறகு விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியிருந்தார். 


இந்நிலையில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “விராட் கோலி டி20 க்ளப் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக ஆர்சிபி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஒரே சீசனில் 921 ரன்கள் குவித்திருந்தார். ஆகவே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது விராட் கோலிக்கு புதிய விஷயம் ஒன்றுமில்லை. 


 






இந்திய அணி இதை ஆலோசனை செய்து பார்க்க வேண்டும். விராட் கோலி அணியின் சிறப்பான வீரர்களில் ஒருவர். அவரும் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் பட்சத்தில் கே.எல்.ராகுல் நம்பர் 3 இடத்தில் களமிறங்க வேண்டும். எனினும் இது குறித்து அணி நிர்வாகம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சிறப்பான வீரர்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 


 


ஆஃப்கானிஸ்தான் டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணியில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக போட்டிக்கு பிறகு கே.எல்.ராகுல் இடம் கேட்கப்பட்டது. அதற்கு கே.எல்.ராகுல், “அப்படி என்றால் நான் வெளியே அமர வேண்டுமா?” என்ற கேள்வியை கேட்டார். மேலும் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கினாலும் சதம் விளாசி அசத்துவார் என்று கூறியிருந்தார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசியிருந்தார். அதன்பின்னர் கிட்டதட்ட 3 ஆண்டுகளில் இவர் 83 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார். இந்தச்  சூழலில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் சதம் கடந்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக அமைந்துள்ளது. இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது. அதிலும் விராட் கோலி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.