சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை, டேவிட் வார்னர் தகர்த்துள்ளார்.
தென்னாப்ரிக்கா - ஆஸ்திரேலியா தொடர்:
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், புளோம்பாண்டீன் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது, டேவிட் வார்னர் 106 ரன்களையும், மார்னஸ் லபுசக்னே 124 ரன்களையும் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி, வெறும் 269 ரன்களை சேர்த்து மொத்தமாக ஆட்டமிழந்தது. இதனால், 123 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
வார்னர் படைத்த புதிய சாதனை:
தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக வார்னர் அடித்த சதம் ஒருநாள் போட்டிகளில் அவர் எடுக்கும் 20வது சதமாகும். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க விரர்களின் பிரிவில் நீண்ட காலமாக சச்சின் டெண்டுல்கர் வசமிருந்த சாதனை ஒன்றை டேவிட் வார்னர் தகர்த்துள்ளார். அதாவது, தொடக்க வீரராக அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சச்சின் சாதனை தகர்ப்பு:
சர்வதேச கிரிக்கெட்டில் 346 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து மொத்தம் 45 சதங்களை பூர்த்தி செய்து இருந்தார். இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் 343 போட்டிகளில் 428 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், தொடக்க வீரராக தனது 46வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 25, ஒருநாள் போட்டிகளில் 20 மற்றும் டி-20 போட்டியில் ஒரு சதம் ஆகியவை அடங்கும். ஆனால், சச்சின் டெண்டுல்கர் வெறும் 342 இன்னிங்ஸ்களிலேயே தொடக்க ஆட்டக்காரராக 45 சதங்களை பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிட்டையே, தொடக்க ஆட்டக்காரராக அதிக சதம் விளாசிய விரர்களின் பட்டியலில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 39 சதங்களுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறார்.
பேட்டிங்கில் அசத்தல்:
தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில், டேவிட் வார்னர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், 29 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தொடங்கிய வார்னர், 144 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,136 ரன்களை சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக 179 ரன்களை குவித்துள்ளார். டெஸ்டில், 199 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 8,487 ரன்களை எடுத்துள்ளார். 109 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 335 ரன்களை குவித்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 100 ரன்களுடன் மொத்தமாக 2,894 ரன்கள் சேர்த்துள்ளார்.