ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கிளென் மேக்ஸ்வெல் ஒரு நிகழ்ச்சியில் அதிக அளவில் மது அருந்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தி வருகிறது. 


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை. அவருக்கு அதிக பணிசுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


அதீத குடியினால் மயக்கம்: 


ஆஸ்திரேலிய செய்தித்தாள் ‘டெய்லி டெலிகிராப்’ படி, கிளென் மேக்ஸ்வெல் சக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீயின் ராக் இசைக்குழுவான ‘சிக்ஸ் அண்ட் அவுட்’ நிகழ்ச்சியை காண அடிலெய்டு சென்றுள்ளார். அங்கு இசை நிகழ்ச்சியை கண்டுகளித்த மேக்ஸ்வெல், நிகழ்ச்சி முடிந்ததும் அதிக அளவில் குடித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் சுயநினைவை இழந்து மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 


வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெலுக்கு பதிலாக ஃப்ரேசர் மாகார்க் சேர்க்கப்பட்டர். பணிச்சுமை காரணமாக மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருநாள் தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் மேக்ஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். 


இந்தநிலையில், கிளென் மேக்ஸ்வெல் குடி போதையில் மயங்கியது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரெலியா கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக, இந்த வார இறுதியில் அடிலெய்டில் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு என்ன நடந்தது என்பது பற்றி விசாரிப்போம் என தெரிவித்துள்ளது. 


ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் சொன்னது என்ன..? 


ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மேக்ஸ்வெல்லுக்கு பயிற்சியாளர் மெக்டொனால்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமான வீரர் என்பதை யாராலும் மறக்க முடியாது. கடந்த 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வேல் இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி தந்ததையும் யாரும் மறந்துவிட கூடாது. மேக்ஸ்வெல் கவனமாக இருக்க வேண்டும். இவர் இன்னும் சில வருடங்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேக்ஸ்வெல் ஒரு சிறந்த மேட்ச் வின்னர். ஆனால் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அதுதான் அவருக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் நல்லது. 


இதுபோன்ற சூழ்நிலையில் அவர் உடல் தகுதி பெறுவதற்கு நேரம் தேவை. நல்லவேளையாக பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்பது நிம்மதியான விஷயம். டி20 தொடரில் மேக்ஸ்வெல் முழு உடல்தகுதியுடன் திரும்ப வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என தெரிவித்தார்.