உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் விவரங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.


ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு:


நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலக்கோப்பை தொடருக்கான அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், முதல் அணியாக இந்த தொடரில் பங்கேற்க உள்ள தங்களது வீரர்களின் விவரங்களை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்த பட்டியல், தொடரின் தொடக்கத்திற்கு முன்பாக 15 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுசக்னேவின் பெயர் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் முன் அனுபவமே இல்லாத இரண்டு வீரர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டு இருப்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது.


வீரர்களின் விவரங்கள்:


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் , மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா


2 இளம் வீரர்கள்:


ஐசிசி விதிகளின்படி செப்டம்பர் 15ம் தேதிக்குள் வீரர்களின் விவரங்கள் ஒவ்வொரு அணியும் இறுதி செய்ய வேண்டும்.  இந்நிலையில், அஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி மற்றும் சுழற்பந்து வீச்சாளரான தன்வீர் சங்கா ஆகிய இரண்டு இளம் வீரர்களின் எண்ட்ரீ தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்வீர் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக ஒருமுறை கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 2020ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானது முதல் தற்போது வரை வெறும் 8 போட்டிகளில் தான், ஆஸ்திரேலிய அணிக்காக லபுசக்னே விளையாடாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள்:


இந்திய மண்ணில் விளையாடி நல்ல அனுபவம் பெற்ற சுழற்பந்து வீச்சாளரகளான ஆஷ்டன் அகர் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் அணியில் இருக்கும்போதே, கூடுதல் ஆப்ஷனாக தன்வீர் கங்கா இணைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் போன்ற அதிரடியான ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும், ஆரோன் ஹார்டி கூடுதலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மீண்டு வரும் கேப்டன்:


நடப்பாண்டு உலக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் போட்டியில், அக்டோபர் 8ம் தேதி இந்திய அணியை சென்னையில் எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே, காயம் காரணமாக ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸிற்கு 6 வாரங்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூலம், அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.