பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வியால் இந்திய அணிக்கு ஒரு பலன் கிடைத்துள்ளது. அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை எட்டியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்:
இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் புள்ளிகளின் சதவீதம் சமமாக இருந்தாலும், இதுவரை இந்திய அணி தோல்வியை சந்திக்காததால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா.
ஒரே போட்டியால் ஏற்பட்ட மாற்றங்கள்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டுக்கு முன்பு பாகிஸ்தானின் புள்ளி சதவீதம் 100 ஆக இருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் புள்ளி சதவீதம் 66.67 ஆக குறைந்ததுள்ளது. இதுவரை 3 டெஸ்ட்டில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றியும், 1 டெஸ்ட்டில் தோல்வியும் சந்தித்துள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தான் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்றுள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்டில் விளையாடி 1 வெற்றி, 1 டிராவில் முடித்தது. இதையடுத்து, இந்திய அணி இதுவரை தோல்வி அடையவில்லை. இதனால் இந்திய அணி 16 புள்ளிகள் மற்றும் 66.67 புள்ளிகள் சதவீதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மீதமுள்ள அணிகள் எங்கே?
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து அணி 50 புள்ளிகள் சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 50 புள்ளிகள் சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 41.67 புள்ளிகள் சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இது தவிர, வெஸ்ட் இண்டீஸ் 16.67 புள்ளி சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இதுவரை ஆஸ்திரேலியா மற்ற அணிகளை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி 6 டெஸ்டில் விளையாடி, 3ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும், 1 டெஸ்ட் டிராவில் முடித்துள்ளது. அதே நேரத்தில் தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ல் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இன்னும் விளையாடவில்லை.
இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தூக்கியது. கடந்த ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸி., 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது தொடர்ச்சியான தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு நியூசிலாந்திற்கு எதிரான 2021 இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தது.