IPL Aucton 2024 Host: ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்களின் ஏலம் நாளை துபாயில் நடைபெற உள்ளது.  முதல்முறையாக, மல்லிகா சாகர் என்ற பெண் தொகுத்து வழங்க உள்ளார்.


ஐபிஎல் 2024 ஏலம்:


ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏலம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏலம் இந்தியாவில் நடைபெறும். இந்நிலையில், ஒரு வரலாற்று நடவடிக்கையாக, 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் துபாயில் நாளை நடைபெற உள்ளது. அதில் இதுவரை பின்பற்றி வந்த நடைமுறையை உடைத்து, ஏலத்தை முதன்முறையாக பெண் ஒருவர் தொகுத்து வழங்க உள்ளார்.


அந்த முதல் பெண் ஏலதாரர் மல்லிகா சாகர் ஆவர். மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் ஐபிஎல் வரலாற்றில் மட்டுமின்றி கிரிக்கெட் உலகிலும் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.


யார் இந்த மல்லிகா சாகர்?


மும்பையில் உள்ள பிரபல ஏல நிறுவனமான பூண்டோல்ஸ் சேர்ந்த புகழ்பெற்ற ஏலதாரர் மல்லிகா சாகர். தொடர்ந்து இரண்டு முறை அவர் மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தை நடத்தி உள்ளார். கலைபொருட்களுக்கான ஏலத்தில் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் அவர் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


பிலடெல்பியாவில் உள்ள பிரைன் மாவ்ர் கல்லூரியின் கலை வரலாற்று மேஜர் பிரிவில் நிபுணத்துவம் பெற்றார். தொடர்ந்து, 2001ம் ஆண்டு பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டியில் ஏலதாரராக தனது வாழ்க்கையைத் மல்லிகா சாகர் தொடங்கினார். அந்த ரேங்கில் பெண் ஏலதாரர் என்ற பெயரை பெற்ற இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையையும் மல்லிகா சாகர் தனதாக்கினார். 2023 மற்றும் 2024ம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் லீக்கிற்கான ஏலத்தில் மட்டுமின்றி, 2021ம் ஆண்டு புரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும் மல்லிகா சாகர் நடத்தியுள்ளார். இந்நிலையில் முதல்முறையாக ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை தொகுத்து வழங்க உள்ளார்.


ஐபிஎல் ஏலம் வரலாறு:


கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான, விரர்களின் ஏலத்தை முதலில் ரிச்சர்ட் மேட்லி என்ற பிரபல ஏலதாரர் தான் நடத்தி வந்தார். அதன்பிறகு ஏலத்துறையில் மிகவும் பிரபலமான மற்றும் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த, ஹக் எட்மீட்ஸ் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்தார்.


இந்நிலையில், கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது பாதியிலேயே ஹக் எட்மீட்ஸ் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதன் காரணமாக இடைபட்டு நின்ற ஏலத்தை சாரு ஷர்மா தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தான், ஐபிஎல் ஏலம் வரலாற்றில் முதல் தொகுப்பாளராக மல்லிகா சாகர் நியமிக்கப்பட்டுள்ளார். 2024ம் ஆண்டு சீசனுக்கான ஏலத்தில் 10 அணிகளில் 77 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான 214 இந்தியர்கள் உட்பட 333 வீரர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.