பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 501 விக்கெட்களை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டினார் நாதன் லயன்.
500 விக்கெட்டுகள்:
ஆஸ்திரேலியாவின் ஆஸ்தான சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500வது விக்கெட்டை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம், உலக கிரிக்கெட்டில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 8வது பந்துவீச்சாளர் மற்றும் ஆஸ்திரேலியாவின் 3வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை நாதன் லயன் படைத்துள்ளார்.
பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பஹீம் அஷ்ரப் பெற்ற விக்கெட் நாதன் லயனின் டெஸ்ட் வாழ்க்கையில் 500வது விக்கெட்டாக அமைந்தது.
இந்த போட்டிக்கு முன்பு 496 விக்கெட்டுகள்:
இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது காயமடைவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் 496 டெஸ்ட் விக்கெட்டுகளை பூர்த்தி செய்திருந்தார். அதன்பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நாதன் லயன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, நாதன் லயன் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மிகச் சில சிறந்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இணைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 8 பந்துவீச்சாளர்கள்:
முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள், ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள், ஜேம்ஸ் ஆண்டர்சன் - 690 விக்கெட்டுகள், அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள், ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள், க்ளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள், கோர்ட்னி வால்ஷ் - 519 விக்கெட்டுகள், நாதன் லயன் - 501 விக்கெட்டுகள்
நாதன் லயனின் டெஸ்ட் வாழ்க்கை:
நாதன் லயன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தம் 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 230 இன்னிங்ஸ்களில் சராசரியாக 30.86 மற்றும் 2.93 என்ற எகானமி ரேட்டில் மொத்தம் 501 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்த 123 போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சு 50 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மேலும், லயன் இதுவரை 22 முறை 4 விக்கெட்டுகளையும், 23 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
லயனுக்கு பின்னால் ரவிச்சந்திரன் அஸ்வின்:
நாதன் லயனுக்கு பின்னாடியே இந்த சாதனையை படைக்க ரவிச்சந்திரன் காத்திருக்கிறார். அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை மொத்தம் 489 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் . 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த உலகின் ஒன்பதாவது பந்துவீச்சாளர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார் அஸ்வின்.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி:
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் 360 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.