உலகக் கோப்பை 2023 போட்டியானது கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகில் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுக்க, அதன் பிறகு முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஷமி 7 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இப்போது அவரது சிறப்பான செயல்திறனுக்கு பிறகு, ஒரு ட்விட்டர்வாசியின் பதிவு சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. @DonMateo_X14 என்ற இந்த பயனர் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக நவம்பர் 14 அன்று தனது X பக்கத்தில் இருந்து ஒரு ட்வீட் செய்தார். அதில், அரையிறுதிப் போட்டியில் ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதாக கனவு கண்டதாக எழுதி இருந்தார்.
அவர் கனவு கண்டாரா இல்லையா என்பது பதிவிட்ட பயனருக்கு மட்டுமே தெரியும். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இப்போது நிஜமாகியுள்ளது. அந்த ட்வீட்டும் தற்போது இணையத்தில் அதிகளவில் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.
இதை பார்த்த ஒரு சில எக்ஸ் பயனர்கள், தயவுசெய்து நன்றாக தூங்கி, என் எதிர்காலத்தைப் பற்றி கனவு காணுங்கள் என்றும், சகோதரன் தயவு செய்து நாம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கனவு காணுங்கள் என்றும் அந்த பதிவிற்கு கீழ் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.
இறுதிப்போட்டியில் இந்திய அணி:
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அபாரமாக பேட்டிங் செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அதன் பின்னர் சுப்மன் கில் 80 ரன்களும், கோலி சதம் அடித்தனர். போட்டியின் போது கில்லும் காயத்துடன் வெளியேற, இதற்கிடையில் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 105 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலும் 39 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 397 ரன்கள் எடுத்தது.
சேஸிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர். இதன் பிறகு கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இன்னிங்ஸை கையில் எடுத்து இந்திய அணிக்கு பயம் காட்ட தொடங்கினர். இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து நியூசிலாந்தை 220 ரன்களுக்கு கொண்டு சென்றனர். அப்போது, முகமது ஷமி இந்திய அணிக்கு தேவையான திருப்புமுனையை வழங்கி வில்லியம்சனை வெளியேற்றினார். கிளென் பிலிப்ஸ் கிரீஸுக்கு வந்து 41 ரன்களுடன் வெளியேற, மிட்செலும் ஒரு கட்டத்தில் போராடி அவுட்டானார். அடுத்தடுத்து நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அவுட் ஆக, இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.