ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 4வது ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அவர் பந்துவீச முடிவு செய்தது ஏன்? என ஆஸ்திரேலிய ரசிகர்களே நினைக்கும் அளவிற்கு ஆட்டம் மாறியது.


தெ.ஆ - ஆஸ்திரேலியா:


ஆட்டத்தை தொடங்கிய டி காக் – ஹென்ட்ரிக்ஸ் மிகவும் நிதானமாகவே ஆடினார்கள். டி காக் மிகவும் நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 12.5 ஓவர்களுக்கு 64 ரன்களை எட்டியிருந்தபோது பிரிந்தனர். ஹென்ட்ரிக்ஸ் 28 ரன்களுக்கு அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் 64 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்திருந்த டி காக்கும் ஆட்டமிழந்தார்.


அடுத்து கேப்டன் மார்க்ரம் வான்டர் டுசென்னுடன் ஜோடி சேர்ந்தார். மார்க்ரம் 8 ரன்களில் ஏமாற்ற கிளாசென் இறங்கினார். மார்க்ரம் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கிளாசென் ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார். அதுவரை ஒருநாள் போட்டி போல சென்று கொண்டிருந்த ஆட்டத்தை டி20 போல கிளாசென் ஆடினார்.


ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசென், மில்லர்:


சிறப்பாக ஆடிய வான்டர்டுசென் 65 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானர். பின்னர், ஜோடி சேர்ந்த கிளாசென் – மில்லர் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசித் தள்ளினர். 34.4வது ஓவரில் வெறும் 194 ரன்களுக்கு இவர்கள் ஜோடி சேர்ந்தனர். ஹேசல்வுட், ஸ்டோய்னிஸ், நேசேர், நாதன் எல்லீஸ், ஜம்பா என யார் வீசினாலும் பந்து பவுண்டரிக்கும், சிக்ஸருக்கு பறந்தது.


கிளாசென் ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆட மறுமுனையில் மில்லர் ருத்ரதாண்டவம் ஆடினார். சிறப்பாக ஆடிய கிளாசென் சதம் அடித்தார். சதத்திற்கும் பிறகும் நிற்காமல் சிக்ஸர்களை பறக்கவிட்ட கிளாசெனுக்கு போட்டியாக, மில்லரும் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.


416 ரன்கள்:


இதனால், 300 ரன்களை கடந்து, 350 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்கா ஸ்கோர் சென்று கொண்டிருந்தது. யார் பந்துவீசினாலும் பந்து காற்றிலே சென்று கொண்டிருந்தது. 34.4 ஓவர்களில் 194 ரன்கள் இருந்த தென்னாப்பிரிக்க அணி 400 ரன்களை கடந்தது. 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்களை எடுத்தது.


கிளாசென் கடைசி பந்தில் தனது விக்கெட் பறிகொடுத்தார். அவர் 83 பந்துகளில் 13 பவுண்டரி 13 சிக்ஸருடன் 174 ரன்கள் எடுத்தார். மில்லர் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஜம்பா மிகவும் மோசமாக பந்துவீசி 10 ஓவர்களில் 113 ரன்களை வாரி வழங்கினார். நேசர் மட்டும் 10 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 100 ரன்களை வெறும் 34 பந்துகளில் கிளாசென் – மில்லர் ஜோடி விளாசியது. கிளாசென்னின் அதிகபட்ச ஸ்கோராக இந்த ஸ்கோர் பதிவானது. இலக்கை நோக்கி ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 


டி20 தொடரை ஆஸ்திரேலிய கைப்பற்றிய நிலையில், முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது. 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இன்று 4வது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் 2-2 என்று சமனாகும். தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.


மேலும் படிக்க: SL vs PAK: கடைசி வரை திக்.. திக்..! கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி... போராடி தோற்றது பாகிஸ்தான்..!


மேலும்படிக்க: IND vs BAN: சம்பிரதாய ஆட்டத்தில் மோதும் இந்தியா - வங்கதேசம் அணிகள்.. ஆனாலும் காத்திருக்கும் சாதனை..!