ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். பிரிஸ்பேனில் உள்ள கபாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 1வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளின் இரண்டாவது இன்னிங்ஸில் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸனை வெளியேற்றியதன்மூலம் ஸ்டார்க் தனது மைல்கல்லை எட்டினார். 






இதையடுத்து, 300 விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 7 வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் ஸ்டார்க் படைத்துள்ளார். 


ஆஸ்திரேலியா அணிக்காக அதிக விக்கெட்கள்:



  • ஷேன் வார்ன்: 708 விக்கெட்டுகள்

  • கிளென் மெக்ராத்: 563 விக்கெட்டுகள்

  • நாதன் லயன் : 450 விக்கெட்டுகள்

  • டென்னிஸ் லில்லி: 355 விக்கெட்டுகள்

  • மிட்செல் ஜான்சன்: 313 விக்கெட்டுகள்

  • பிரட் லீ: 310 விக்கெட்டுகள்

  • மிட்செல் ஸ்டார்க்: 300 விக்கெட்டுகள்


மிட்செல் ஸ்டார்க்:


இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கடந்த 2011ம் ஆண்டு இதே பிரிஸ்பேன் மைதானத்தில் அறிமுகமானார். நியூசிலாந்து அணியின் முன்னாள கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் டேவிட் வார்னரிடம் கேட்ச் ஆனபோது தனது மறக்கமுடியாத முதல் விக்கெட்டை ஸ்டார்க் பதிவு செய்தார். தனது 20 வருட ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டார்க் 74 டெஸ்ட் போட்டிகளில் 301 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில், 13 ஐந்து விக்கெட்களும், இரண்டு முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்:


டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 


முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 218 ரன்களில் ஆல்- அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 64 ரன்னும், பவுமா 38 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 99 ரன்களில் சுருண்ட நிலையில் 34 ரன்கள் இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. 


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் கபா மைதானத்தில்  இரண்டு நாட்களில் 34 விக்கெட்டுகள் சரிந்தன. தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தேநீர் இடைவேளைக்கு பிறகு 34 ரன்களை விரட்டியது. அப்போது ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு பிறகே தங்களது வெற்றியை நிறைவு செய்தனர்.