இரண்டே நாளில் வெற்றி:


ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தது. பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. 


டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 


சொதப்பிய தெ.ஆப்பிரிக்கா:


முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா 218 ரன்களில் ஆல்- அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 64 ரன்னும், பவுமா 38 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


34 ரன்கள் இலக்கு:


2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 99 ரன்களில் சுருண்ட நிலையில் 34 ரன்கள் இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. 


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் கபா மைதானத்தில்  இரண்டு நாட்களில் 34 விக்கெட்டுகள் சரிந்தன. தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தேநீர் இடைவேளைக்கு பிறகு 34 ரன்களை விரட்டியது. அப்போது ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு பிறகே தங்களது வெற்றியை நிறைவு செய்தனர்.


இரண்டு நாட்களில் 34 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், கப்பா ட்ராக் ஒரு பந்துவீச்சாளர்களின் சொர்க்கமாக காணப்பட்டது. 


உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெறுமா இந்தியா? 


இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இந்த இரண்டு முடிவுகளுக்குப் பிறகு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.


இந்தியா 55.77 புள்ளிகள் சதவீதத்தில் உள்ளது. இந்த தோல்விக்கு பிரகு தென்னாப்பிரிக்காவின் புள்ளிகளில் 60 சதவீதத்தில் இருந்து 54.55 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு களமிறங்கும் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி வென்றது. 


இந்தியா அணி வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தியா வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து, மூன்று டெஸ்டில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரா செய்தால், குறைந்தபட்ச புள்ளிகள் 64.35 சதவீதத்துடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.