உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், 2021-22ம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.




இரு அணிகளும் சரிசம பலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளன. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கில் தூணாக உள்ளார். அவருக்கு பக்கபலமாக ஜானி பார்ஸ்டோ, ஜோஸ் பட்லர். டான் லாரன்ஸ், டேவிட் மலான் உள்ளனர். நீண்ட ஓய்வில் இருந்த இங்கிலாந்தின் அசத்தலான ஆல் ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடர் மூலம் மீண்டும் களம் திரும்ப உள்ளார். இவர்கள் மட்டுமின்றி வேகப்பந்து வீச்சில் ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் மிரட்ட காத்துள்ளனர். இவர்களுடன் கிறிஸ்வோக்ஸ், மார்க்வுட், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரும் வேகப்பந்துவீச்சில் அசத்த உள்ளனர்.


ஆஸ்திரேலிய அணியில் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக கேப்டன் பொறுப்பில் இருந்து டிம்பெய்ன் விலகியதைத் தொடர்ந்து, புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் பாட் கம்மின்ஸ் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பக்கபலமாக துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.




பேட்டிங்கில் டேவிட் வார்னர், லபுஸ்கனே, ட்ராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி ஆகியோருடன் ஸ்டீவ் ஸ்மித்தும் பலமாக உள்ளனர். பந்துவீச்சில் கேப்டன் பாட் கம்மின்ஸ், அனுபவம் வாய்ந்த மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் அசத்த நாதன் லயன் உள்ளார். மிகவும் பாரம்பரியமிக்க இந்த தொடர் நாளை தொடங்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்த போட்டித்தொடர் முழுவதும் சோனிலைவ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவி வரும் நிலையில், இந்த தொடரில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண