கிரிக்கெட் உலகில் பல நடுவர்கள் இருந்தாலும் எல்லா நாட்டு ரசிகர்களுக்கும் பிடித்த நடுவர்கள் என்றால் அது சைமன் டாஃபுல் மற்றும் பில்லி பவுடன் தான். ஒருவர் சிறப்பான நடுவர் தீர்ப்பிற்கு பெயர் போனவர். மற்றவர் சிறப்பான நடுவர் செய்கைக்கு பெயர் போனவர். ஒவ்வொரு முறையும் பில்லி பவுடன் அவுட் கொடுக்கும் போது அல்லது பவுண்டரி, சிக்ஸ் செய்கை காட்டும் போது நமக்கு ஒரு பெரிய இன்பமாக அமையும். கிரிக்கெட் போட்டியுடன் சேர்ந்து அவருடைய செய்கைகளும் நமக்கு பெரிய விருந்தாக அமையும்.
நியூசிலாந்தைச் சேர்ந்த பில்லி பவுடன் 1995ஆம் ஆண்டு முதல் ஐசிசியின் நடுவராக பணியாற்றி வந்தார். இவர் 2016ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராக இருந்தார். இவர் 104 டெஸ்ட் போட்டிகள், 259 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். எப்போதும் அவருடைய செய்கைக்கு பலரும் அடிமையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் அவருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்தியாவில் உள்ளூர் போட்டியில் நடுவர் ஒருவர் வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ளூர் போட்டியில் நடுவர் ஒருவர் வைடு பந்திற்கு சிக்னல் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அதில் வழக்கத்திற்கு மாறாக அவர் தலை கீழாக நின்று இரண்டு கால்களையும் தூக்கி வைடு சிக்னலை கொடுத்து வருகிறார். இந்த வீடியோவை தற்போது வரை ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் யோகா டீச்சர் நடுவராக வந்துவிட்டார் போல என்று பலரும் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: "பாசம் வைக்க நேசம் வைக்க.. தோழன் உண்டு.." வைரலாகும் தோனி-யுவராஜ் சிங் சந்திப்பு !