இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி 2017ஆம் ஆண்டு நியமிக்கபட்டார். 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு ரவி சாஸ்திரி இந்திய பயிற்சியாளர் பதவியை தொடங்கினார். அன்று முதல் 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை அவர் இந்திய பயிற்சியாளராக இருந்தார். அவருடைய பதவிக்காலத்திற்கு தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தப் போது ஏற்பட்ட நெருக்கடியான தருணம் தொடர்பாக ரவிசாஸ்திரி மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,”இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் எப்போதும் உங்களுடைய தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்குவது போல் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் எப்போது எல்லாம் அணி சரியாக விளையாடவில்லையோ அப்போதே உங்களுடைய பதவிக்கு ஆபத்து வரலாம். அத்துடன் விமர்சனங்களும் வரலாம். ஆகவே நான் எப்போதும் அதற்கு தயாராகவே இருந்தேன்.
இப்படி இருக்கும் போது எனக்கு பெரிய நெருக்கடியாக அமைந்தது 2020-21 ஆஸ்திரேலிய தொடர் தான். அந்தத் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அது எனக்கு மட்டுமல்ல அணிக்கும் பெரிய ஷாக்காக அமைந்தது. அந்த சமயத்தில் என்ன நடந்தது என்றே எங்களுக்கு புரியவில்லை. நான் அந்த மாதிரியான நெருக்கடியான தருணத்தை எப்போதும் உணர்ந்ததில்லை. எனினும் அந்த தருணத்தில் நான் வீரர்களிடம் கூறியது ஒன்றே ஒன்று தான். அதாவது இனிமேல் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள் எனக் கூறினேன். அதை ஏற்று அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
அடுத்த ஒரு மாதத்தில் நாங்கள் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையை வென்றோம். அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது” எனக் கூறியுள்ளார். 2020-21 ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு இந்திய அணி அந்தத் தொடரில் மீண்டு எழுந்து அசத்தல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரவி சாஸ்திரி இந்திய பயிற்சியாளராக செயல்பாடு(2017-2021):
தொடர்கள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | பிற முடிவு | வெற்றி % |
---|---|---|---|---|---|
டெஸ்ட் | 43 | 25 | 13 | 5 | 58.1% |
ஒருநாள் | 76 | 51 | 22 | 3 | 67.1% |
டி20 | 65 | 45 | 18 | 2 | 69.2% |
ரவிசாஸ்திரி பதவிக்காலத்தில் இந்திய அணி முதலில் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்றது. அதில் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியது. அதிலும் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்ல தவறியது. கடைசியாக 2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. அதில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி மேலும் ஒரு பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று தரவில்லை என்றாலும் ரவி சாஸ்திரி நான்கு ஆண்டுகளில் இந்திய அணியை ஒரு சிறப்பான அணியாக கட்டமைத்தார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க:"பாசம் வைக்க நேசம் வைக்க.. தோழன் உண்டு.." வைரலாகும் தோனி-யுவராஜ் சிங் சந்திப்பு !