இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 


டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ஸ்மித் அபாரம்:


இதையடுத்து, சிட்னியில் இன்று இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது.


ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 94 ரன்களும், லபுஸ்சேன் 58 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 


இங்கிலாந்து தடுமாற்றம் :


281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாற தொடங்கியது. பிலிப் சால்ட் 23 ரன்களிலும், டேவிட் மலான் ரன்கள் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 45 ரன்கள் எடுத்திருந்தது. 


அடுத்து, ஜேம்ஸ் வின்சுடன் ஜோடி சேர்த்த சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து மீட்க போராடினர். இருவரும் ஓரளவு தாக்குபிடித்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் பந்தை பவுண்டரிக்கு விரட்டினர். இருவரும் இணைந்து 122 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். 


தொடரை வென்ற ஆஸ்திரேலியா :


72 பந்துகளில் 60 ரன்கள் குவித்திருந்த ஜேம்ஸ் வின்ஸ் ஹசல்வுட் வீசிய 28 வது ஓவரில் எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேறினார். அடுத்து உள்ளே வந்த இங்கிலாந்து அணி கேப்டன் மொயீன் அலி 4 பந்துகளில் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து 10 ரன்களில் வெளியேறினார். 


தொடர்ந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த சாம் பில்லிங்ஸ் 71 ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்த வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து அணி 38. 5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த்து 208 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது. 






ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் மற்றும் ஜாம்பா தலா 4 விக்கெட்களும், ஹசல்வுட் 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். ஆட்டநாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.