நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில்,  63 ரன்கள் முன்னிலையுடன்  நான்காவது நாளான இன்று இந்திய அணி ஆட்டத்தை தொடங்கி  ஆடி வருகிறது. 



இந்திய அணி இன்று தொடக்கம் முதலே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாயங்க் அகர்வால் 17 ரன்களில் வெளியேற, இந்திய அணியில் தற்போது சுவராக காணப்படும் புஜாராவும் 22 ரன்களில் நடையை கட்டினார். 



தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 4 ரன்களில் ஏமாற்றம் அளிக்க, கடந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஜடேஜா இந்த முறை ரன் எண்ணிக்கையை தொடங்காமலே அவுட் ஆனார். அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயருடன் அஸ்வின் இணைந்து இந்திய அணியின் எண்ணிக்கையை உயர்த்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 



சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஜெமிசன் வீசிய 39. 2 வது ஓவரில் அஸ்வின் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு புறம் பொறுமையாக விளையாடி 65 ரன்களில் தனது விக்கெட்டை சௌதீயிடம் பறிகொடுத்தார். 


இந்திய அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து இருந்தபோது, விருத்திமான் சஹா மற்றும் அக்சர் பட்டேல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். தொடர்ந்து இவர்களின் விக்கெட்டை எடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பந்து வீச்சாளர்கள் சோர்ந்து போக, மறுபுறம் சஹா அரைசதம் அடித்து அசத்தினார். 


இந்தநிலையில், இந்திய அணி 234/7 டிக்ளர் செய்தது. விக்கெட் கீப்பர் சஹா 61 ரன்களுடனும். அக்சர் பட்டேல் 28 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். 


இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 64 ரன்களும், சஹா 61 ரன்களும் அடித்திருந்தனர். 
அதேபோல், நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சௌதீ மற்றும் ஜெமிசன் தலா 3 விக்கெட்களும், அஜாஸ் பட்டேல் 1 விக்கெட்களும் எடுத்து இருந்தனர். 


  284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக வில் எங் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் வில் யங் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 417 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மேலும் மற்றொரு ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்கள் என்ற சாதனையை இவர் சமன் செய்துள்ளார். 



நான்காம் நாள் ஆட்ட நாள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்களுடன் களத்தில் உள்ளது. டாம் லதம் 2 ரன்களில் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். இந்திய அணி மீதமுள்ள 9 விக்கெட்களை நாளை வீழ்த்தும் பட்சத்தில் வெற்றி பெற்று அசத்தும். இந்திய அணி போட்டியில் வெற்றிபெற்றால் 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற முன்னிலை பெறும் . 


ஏற்கனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண