இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாளான இன்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் நியூசிலாந்து அணியைவிட 216 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய புஜாரா 22 ரன்களுடன் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இவர் ஏற்கெனவே முதல் இன்னிங்ஸிலும் 26 ரன்களுடன் ஆட்டமிழந்திருந்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1010 நாட்கள் சதம் அடிக்காமல் இருந்து வருகிறார்.
கடைசியாக புஜாரா 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் அடித்திருந்தார். அதற்கு பிறகு புஜாரா 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவற்றில் வெறும் 6 அரைசதங்கள் மட்டும் அடித்துள்ளார். அத்துடன் அவருடைய சராசரி 30.42 ஆக இருந்து வருகிறது.
இவை தவிர புஜாரா மீண்டும் ஒரு தேவையற்ற சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். அதாவது இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 3 இடத்தில் களமிறங்கி அதிக இன்னிங்ஸில் சதம் அடிக்காமல் இருந்த வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த முதல் டெஸ்ட் வரை புஜாரா 39 இன்னிங்ஸில் நம்பர் 3 இடத்தில் களமிறங்கி சதம் அடிக்கவில்லை. இதன்மூலம் அஜித் வாடேகர் 1968-1974 ஆம் ஆண்டு வரை 39 இன்னிங்ஸில் 3ஆவது இடத்தில் களமிறங்கி சதம் அடிக்காமல் இருந்ததை தற்போது புஜாரா சமன் செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் புஜாரா இடம்பெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை 37 டெஸ்ட் இன்னிங்ஸில் நம்பர் 3 இடத்தில் களமிறங்கிய புஜாரா ஒரு சதம் கூட அடிக்காமல் இந்த பட்டியலில் இடம்பிடித்தார். இப்பட்டியலில் இவருக்கு அடுத்தப்படியாக 1979-82 ஆம் ஆண்டு வரை நம்பர் 3 இடத்தில் களமிறங்கிய திலீப் வெங்சர்கார் 25 இன்னிங்ஸில் சதம் அடிக்காமல் விளையாடியுள்ளார்.
இப்படி கடந்த ஒன்றரை ஆண்டாக மிகவும் மோசமாக விளையாடி வரும் புஜாரா அடுத்த இன்னிங்ஸில் சதம் அடிக்க தவறினால் இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடுவார். இது அவருக்கு ஒரு தேவையில்லாத சாதனையாக அமைந்துவிடும். ஆகவே அடுத்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த போட்டிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி வரும் பட்சத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும். அதில் புஜாரா அல்லது ரஹானே ஆகிய இருவரில் ஒருவரை அணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க: ஒரு சதம், அரைசதம் அடிச்சு ரெக்கார்டுக்கு மேல் ரெக்கார்டு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !