Asian Games 2023: சீனாவில் 19வது ஆசிய போட்டிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஒரு அங்கமாக நடைபெறும் மகளிர் கிரிக்கெட் போட்டியில், தங்கப்பதக்கத்திற்கு இந்திய அணியும் இலங்கை அணியும் மோதிக்கொண்டன. இதில் இந்திய மகளிர் அணி இலங்கை மகளிர் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நகரமான சீனாவில் ஆங்சூ மாநகரில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. டாஸ் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. பேட்டிங்கை தொடங்கி மெல்ல மெல்ல ரன்கள் சேர்த்துக்கொண்டு இருந்த போது இந்திய அணியின் அதிரடி ஆட்ட நாயகி ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டினை 9 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ரோட்ரிக்ஸ் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து நிலையான ஆட்டத்தினை விளையாடி வந்தனர்.
இருவரும் இணைந்து இந்திய அணிக்கு 15 ஓவர்கள் முடிவில் 2வது விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஸ்மிருதி மந்தனா 45 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 46 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீராங்கனைகள் யாரும் சரியாக விளையாடததால், இந்திய அணியின் ரன்ரேட் எதிர்பார்த்ததைவிடவும் குறைந்தது. இறுதியில் இந்திய மகளிர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 116 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும் ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் பிரபோதனி, ரனவீரா மற்றும் சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.
அதன் பின்னர் 120 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது போட்டியின் மூன்றாவது ஓவரை இந்திய அணியின் டிடாஸ் சதுவின் ஓவரில் இலங்கை அணியின் அனுஷ்கா சஞ்சீவனி மற்றும் விஷ்மி குனரத்னே ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் பெரும் அதிர்ச்சியில் இருந்த இலங்கை மகளிர் அணி அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வர முயற்சி செய்தபோதே இலங்கை அணிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இலங்கை அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான சமாரி அத்தபட்டு தனது விக்கெட்டினை டிடாஸ் சதுவின் ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 14 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அதன் பின்னர் இலங்கை அணியின் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்கள் இலங்கை அணியை வெற்றி பெற வைக்க முயற்சி செய்தாலும் இந்திய அணியின் அதிரடியான பந்துவீச்சினால், தோல்வியின் வித்தியாசத்தினை மட்டும்தான் குறைக்க முடிந்ததே தவிர, தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தியது.