2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கை மகளிர் அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு சீனா நாட்டின் ஹாங்சோவில் உள்ள Zhejiang தொழில்நுட்ப பல்கலைக்கழக Pingfeng கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இது டி20 வடிவத்தில் விளையாடப்படும்.
முன்னதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, டி20 உலக தரவரிசை பட்டியலின் அடிப்படையில் நேரடியாக காலிறுதி போட்டியில் களமிறங்கியது. இந்தியாவை தவிர, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் காலிறுதியில் விளையாடின. மலேசியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் ஸ்மிருதி மந்தான தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதித்த இரண்டு போட்டி தடைக்கு பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று இறுதிப்போட்டியில் களமிறங்குவார். இதன்மூலம், மந்தனா வகித்த கேப்டன் பொறுப்புகளை ஹர்மன்ப்ரீத் ஏற்க வாய்ப்புள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி:
கடந்த 2014 ம் ஆண்டு இன்ச்சியோனில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஹாங்சோவில் நடந்த காலிறுதி போட்டியில் தாய்லாந்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை, அரையிறுதியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பெண்கள் டி20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு அசாத்திய சாதனையை படைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான 23 டி20 போட்டிகளில் இந்தியா 18 முறை வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் திங்கள்கிழமை வெண்கலப் பதக்கத்திற்காக விளையாடுகிறது.
இந்தியா vs இலங்கை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியை நேரடியாக எங்கே பார்க்கலாம்..?
இந்தியாவில் டிவி சேனல்கள்: இந்தியா vs இலங்கை ஆசிய விளையாட்டு 2023 மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு சோனி லிவில் காணலாம். இதையடுத்து, Sony Sports Ten 1 SD & HD (ஆங்கிலம்), Sony Sports Ten 3 SD & HD (ஹிந்தி) மற்றும் Sony Sports Ten 4 SD & HD (தமிழ் & தெலுங்கு) ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.)
இந்தியா பங்கேற்பது இதுவே முதல்முறை:
மகளிருக்கான கிரிக்கெட் 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு, 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டது. முன்னதாக, நடைபெற்ற இரண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கை மகளிர் அணி வெண்கல பதக்கத்தை வென்றிருந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். பங்கேற்ற முதல்முறையே இறுதிப்போட்டியில் இடம்பிடித்து அசத்தியுள்ளது.